மேட்டுப்பாளையம்; காரமடை வனப்பகுதிக்குட்பட்ட மலைக்கிராமங்களில் வீடு வீடாக சென்று நாட்டு துப்பாக்கி, அவுட்டு காய் வைத்திருந்தால் கொடுத்துவிடுங்கள், விலங்குகளை வேட்டையாடினால் வனக்குற்றம் என பழங்குடியின மக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், வன உரிமை பட்டா ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கையும் விடுத்தனர்.காரமடை வனப்பகுதிக்குட்பட்ட சுரண்டை மலைக்கிராம பகுதியை சேர்ந்த மூன்று பேர் அண்மையில் அத்திக்கடவு வனப்பகுதியில், வனவிலங்குகளை வேட்டையாட சென்ற போது, அவர்களிடையே இடையே ஏற்பட்ட தகராறில் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் சஞ்ஜித் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் எதிரொலியாக காரமடை வனத்துறையினர் பில்லுார் டேம், அன்சூர், அத்திக்கடவு, சுரண்டை, முள்ளி, வெள்ளியங்காடு என பல்வேறு மலைக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:- காரமடை வனப்பகுதிக்குட்பட்ட மலைக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பழங்குடியின மக்களிடம் நாட்டு துப்பாக்கி, அவுட் காய் வைத்திருந்தால் எங்களிடம் கொடுத்து விடுங்கள்.வேட்டையாடினால் வனக்குற்றம். வனம் மற்றும் வனக்குற்றத்தில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வன உரிமை பட்டா ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தினோம்.
மேலும், வேட்டை கும்பல்கள் நடமாட்டம் தொடர்பாக, அடர் வனப்பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். வனப்பகுதியின் எல்லைகளில் போலீசாருடன் இணைந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பில்லுார் டேம் வனப்பகுதி அருகே போலீசார் ரோந்து சென்ற போது, குந்தா ஆற்றின் கரையோரம் கள்ள சாராயம் காய்ச்ச, சாராய பொருட்களை ஊற வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாகவும்வனத்துறையினர் முள்ளி செக்போஸ்ட் மற்றும் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.வனப்பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சினாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply