நிரம்பிய நிலையில் சோலையாறு; பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

வால்பாறை; வால்பாறையில், கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்குப்பருவ மழை துவங்கியது. ஜூன் மாதம் இறுதியில் இடைவிடாமல் பெய்த கனமழையால்,160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக, பரம்பிக்குளம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக, வால்பாறையில் மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும், சோலையாறு அணையின் நீர்மட்டம் குறையாமல், 11 நாட்களாக நிரம்பிய நிலையில் காட்சியளிக்கிறது.அணைக்கு வினாடிக்கு, 1,590 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,678 கன அடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால் இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 159.60 அடியாக உயர்ந்தது. இதே போல் ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 117.15 அடியாக உயர்ந்தது. பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மழை எவ்வளவு?


நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு(மி.மீ.,): சோலையாறு – 17, பரம்பிக்குளம் – 3, ஆழியாறு – 2, வால்பாறை – 14, மேல்நீராறு – 21, கீழ்நீராறு – 20, மேல்ஆழியாறு -4, வேட்டைக்காரன்புதுார் – 5. மணக்கடவு – 13, துணக்கடவு – 4, பொள்ளாச்சி – 6.