பொள்ளாச்சி; ‘பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர்கள், கவுன்சிலர்களின் கணவர்கள் இடையூறு செய்வதால் நிம்மதியாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால், மன உளைச்சல் ஏற்படுகிறது,’ என, நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், கமிஷனரிடம் முறையீட்டனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு அடிப்படை தேவைகள், வசதிகளை மேம்படுத்த நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றாக கூடி, பணிகளை புறக்கணித்து நகராட்சி கமிஷனர் கணேசனை சந்தித்து முறையீட்டனர்.
அதிகாரிகள், ஊழியர்கள் பேசியதாவது:

பொள்ளாச்சி நகராட்சியில், கவுன்சிலர்கள், கவுன்சிலர்களின் கணவர்கள், உறவினர்கள் தலையீட்டால், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை செய்வதில் இடையூறு ஏற்படுகிறது.குடிநீர் வீட்டு இணைப்பு வழங்க வேண்டுமென்றால், நகராட்சிக்கு பணம் கட்டிய பின்னரே இணைப்பு வழங்க முடியும். ஆனால், பணம் கட்டுவதற்கு முன்பே, வேலை செய்ய சொல்லி கவுன்சிலர்கள் வற்புறுத்துகின்றனர்.
கேள்வி எழுப்பினால், உங்களை என்ன பண்ணணும்னு எங்களுக்கு தெரியும் என மிரட்டும் தொணியில் பேசுகின்றனர். ஒவ்வொரு முறையும் இதை சொல்லும் போது பணியை செய்ய அச்சமாக உள்ளது.
பொது இடத்தில் அத்துமீறி வைத்த பிளக்ஸ் பேனரை அகற்றுவதில் கூட தலையீடு அதிகரித்துள்ளது.
புதிதாக கட்டடம் கட்டும் உரிமையாளர்களிடம் நேரடியாக பேசினால், உடனே சம்பந்தப்பட்ட கவுன்சிலர் அல்லது அவரது கணவர் போனில் தொடர்பு கொண்டு, மக்களிடம் நேரடியாக நீங்க பேசக்கூடாது. எங்கள் வாயிலாகத்தான் பேச வேண்டும் என கூறுகின்றனர்.
கட்டட உரிமையாளர்களிடம் ஒரு சில கவுன்சிலர்கள், கவுன்சிலர்களின் கணவர்கள், தாங்கள் அப்ரூவல் வாங்கித்தருவதாக கூறுவதாக தெரிகிறது. அதிகாரிகளிடம் ஒரு சில நேரங்களில், மரியாதை குறைவாக ஒருமையில் பேசுகின்றனர்.
குப்பை அகற்றுவதிலும் தலையிடுகின்றனர். அவர்கள் கூறும் நேரத்தில் தான் குப்பை அகற்ற வேண்டும் என்கின்றனர். காலையில், 4:00 மணிக்கு குடிநீர் வழங்கினால், 5:00 மணிக்கு வழங்குமாறு கூறுகின்றனர். அடுத்த நாள் 5:00 மணிக்கு வினியோகம் செய்தால், நேரத்தை மாற்றுங்க என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி பேசுகின்றனர்.
வரி வசூலிக்க சென்றால், தேர்தல் நெருங்குகிறது, இப்போது வரி வசூலிக்க வேண்டாம் எனக்கூறுகின்றனர். வார்டுக்குள் அன்றாட பணிகளை செய்வதை கூட அவர்களை கேட்காமல் செய்யக்கூடாது எனக்கூறுகின்றனர்.
தெருவிளக்கு பராமரிப்பு முதல் அனைத்து பணிகளிலும் அவர்களது தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. கேள்வி கேட்டால், அதிகாரிகள் சரிவர பணி செய்வதில்லை என்பது போல குறை கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் மன உளைச்சலுடன், அச்சத்துடன் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எதற்கெடுத்தாலும் குறை சொல்வதால் நிம்மதியாக பணி செய்ய முடிவதில்லை. ஆட்கள் பற்றாக்குறை உள்ள சூழலில், கூடுதல் பணிச்சுமையால் தவிக்கிறோம். பணியை செய்ய இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றாக கூடி கமிஷனரை சந்தித்து, கவுன்சிலர் குறித்து புகார் தெரிவித்து முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேசி தீர்வு காண்போம்!
நகராட்சி கமிஷனர் பேசியதாவது:நகராட்சி கவுன்சில் கூட்டத்தில், யாரையும் மரியாதை குறைவாக பேச வேண்டாம் என ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.அரசு சம்பளம் தருகிறது, அதற்காக பணி செய்கிறோம். கவுன்சிலர்களும், மக்கள் பணி செய்வதற்காக வந்துள்ளனர், நாமும் அந்த பணியைத்தான் செய்கிறோம்.அதிகாரிகள், கவுன்சிலர்கள் இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும். இது குறித்து, நகராட்சி தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம். நாளை (இன்று) நகராட்சி கூட்டம் நடக்கிறது. அதில் பேசி தீர்வு காணலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.
Leave a Reply