2041ல் 18.20 லட்சம் வீடுகள் தேவை: ‘மாஸ்டர் பிளான்’ அறிக்கையில் அரசுக்கு பரிந்துரை

கோவை: ‘வரும், 2041ல் எதிர்பார்க்கப்படும் உத்தேச மக்கள் தொகையை கணக்கிட்டு, 18.20 லட்சம் வீடுகள் தேவைப்படும்’ என, தமிழக அரசுக்கு, நகர ஊரமைப்புத்துறை பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

‘மாஸ்டர் பிளான்’ (முழுமை திட்டம்) என்பது, ஒரு நகரின் எதிர்கால வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை கொண்ட செயல் திட்ட (ஆக்சன் பிளான்) ஆவணம். 2041ல் இருக்கும் உத்தேச மக்கள் தொகையை கணக்கிட்டு, நகரின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து, உள்கட்டமைப்பு வசதிகளை எந்தளவுக்கு மேம்படுத்த வேண்டும் என்கிற முன்மொழிவுகளை, கோவைக்கான ‘மாஸ்டர் பிளான்’ அறிக்கையில், நகர ஊரமைப்பு துறை தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக, ஆற்றல் மிகுந்த இரண்டாம் அடுக்கு நகராக கோவை உருவெடுத்திருக்கிறது.

உள்ளூர் திட்ட குழுமத்தின் எல்லை, 1,531.57 சதுர கி.மீ., வரையறுக்கப்பட்டுள்ளது. இதில், 59.62 சதவீத நிலப்பரப்பு விவசாய பகுதியாக இருக்கிறது. 20.73 சதவீதம் குடியிருப்பு பயன்பாடாக உள்ளது. 5.12 சதவீத நிலம் தொழில்துறை, 3.73 சதவீதம் நிறுவன பகுதிகளாகவும் காணப்படுகின்றன.

வீடுகள் தேவை


2041ல் மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை, 39 லட்சத்தை எட்டும்; உள்ளூர் திட்ட குழும பகுதியில், 58.24 லட்சம் மக்கள் தொகை இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகைக்கேற்ப, 18.20 லட்சம் வீடுகள் உருவாகும். வீடு அடர்த்தி சராசரி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு, 1,188 என்கிற விகிதத்தில் இருக்கும்.

கவுண்டம்பாளையம், வீரகேரளம் மற்றும் பிற கல்வி, தொழில்துறை மண்டலங்களில் கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சியால் மேலும் நகரமயமாகும். அவிநாசி ரோடு, தேசிய ரோடு வழித்தடங்களை மையமாகக் கொண்டு குடியிருப்பு மற்றும் கட்டுமான பணிகள் விரிவடையும். 2041ல் வீடுகளின் தேவை, 8.32 லட்சம் அலகுகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. வாடகைக்கு எடுத்து பின்னர் சொந்தமாக்கிக் கொள்ளும் திட்டங்களை அறிமுகப்படுத்தினால், புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென முன்மொழியப்பட்டு இருக்கிறது.
மாணவர்கள், பணியாளர்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், கல்வி வளாகங்கள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களுக்கு அருகில் விடுதிகள் அமைக்க வேண்டும். நிறுவனங்களின் கூட்டு நிதி பங்களிப்புடன் உருவாக்கலாம்.

ஒரு தனி நபருக்கு குறைந்தபட்சம், 10.12 சதுர மீட்டர் திறந்தவெளி பகுதி இருக்க வேண்டும். அதன்படி, உள்ளூர் திட்ட பகுதியில், 3,535 ஹெக்டேர் திறந்தவெளி பகுதி கூடுதலாக தேவைப்படும். ஒருங்கிணைந்த மனநல சேவைகள் மற்றும் மறுவாழ்வு வழங்கும் மண்டல மையம் அமைக்க வேண்டும்.

கோவை வடக்கு மற்றும் தெற்கு வட்டாரங்களில் மருத்துவமனைகள் உருவாக்க வேண்டும். மதுக்கரை நகராட்சி, வீரபாண்டி பேரூராட்சி, சுண்டாக்காமுத்துார் கிராமத்தில் புதிதாக கால்நடை மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும். இடையர்பாளையம், சர்க்கார் சாமக்குளத்தில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் பூங்காக்களில் சிறு நுாலகங்கள் ஏற்படுத்த வேண்டுமென முன்மொழியப்பட்டிருக்கின்றன.

சுத்திகரிப்புநிலையங்கள்


குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கிழக்கு சித்திரைச்சாவடி, மதுக்கரை, பிச்சனுாரில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்; 6.50 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். புதிதாக, 128 மேல்நிலை தொட்டிகள் கட்ட வேண்டியது அவசியம்.

கழிவு நீர் மேலாண்மைக்கு பிளிச்சி, அரசூர் ஆகிய இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்க வேண்டும். பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற் சாலைகளில் வெளியேற்றும் கழிவு நீரை சுத்திகரிக்க பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு, ‘மாஸ்டர் பிளான்’ அறிக்கையில், முன்மொழியப்பட்டு உள்ளது.