அன்னுார்; நல்லிசெட்டிபாளையம் குளத்தில் சொட்டு சொட்டாக வரும் அத்திக்கடவு நீரால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம், 1,942 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023 மார்ச் மாதம் சோதனை ஓட்டம் தொடங்கியது. 2024 ஆகஸ்டில் முதல்வர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.எனினும் காரேகவுண்டன் பாளையம் ஊராட்சியை சேர்ந்த நல்லிசெட்டிபாளையம், சாலையூர் ஆகிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் சொட்டு சொட்டாக மட்டுமே அத்திக்கடவு நீர் வருகிறது.

நல்லி செட்டிபாளையம் நேரு இளைஞர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ‘இப்பகுதியில் வாழை, நிலக்கடலை மற்றும் பயறு வகைகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. அத்திக்கடவு திட்டத்தில் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயத்துக்கு பயனாக இருக்கும். ஆனால், சொட்டு சொட்டாக மட்டுமே அத்திக்கடவு நீர் வருகிறது. இப்படி நீர் வருவதால், குளம், நிரம்புவதற்கு பல ஆண்டுகள் ஆகும். குன்னத்தூராம்பாளையத்தில் உள்ள அத்திக்கடவு நீரேற்று நிலையத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுத்து, காரே கவுண்டம்பாளையம் ஊராட்சியில் உள்ள குளம், குட்டைகளில் அத்திக்கடவு நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதேக்போல், அன்னூர் பேரூராட்சியில், சொக்கம்பாளையத்தில் உள்ள, 15 ஏக்கர் குளத்தில், பல மாதங்களாக அத்திக்கடவு நீர் வரவில்லை. அன்னுார் பேரூராட்சியில் அன்னூர், அல்லிகுளம், ஆலாம்பாளையம் உள்ளிட்ட குளங்களுக்கு, 50க்கும் மேற்பட்ட முறை தண்ணீர் வந்துள்ளது. ஆனால், சொக்கம்பாளையம் குளத்திற்கு மட்டும் பல மாதங்களாக அத்திக்கடவு நீர் வரவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Leave a Reply