மேட்டுப்பாளையம்; தமிழக – கேரள எல்லைப்பகுதிகளில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் நபர்களுக்கு, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதால் கேரள மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ் பரவாமல் இருக்க கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கோபனாரியில் சுகாதாரத்துறையினர் மருத்துவ குழுவினரிடன் முகாமிட்டுள்ளனர். இவர்கள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்கின்றனர். காய்ச்சல் இருந்தால், ‘எத்தனை நாட்களாக உள்ளது; இருமல் – தொண்டை வலி உள்ளதா, நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுகிறதா’ என, பரிசோதனை செய்கின்றனர்.
காய்ச்சல் உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படுகின்றனர்.
மேலும் விவரங்களை சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும், அந்தந்த வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.
உஷார்
மருத்துவக் குழுவினர் கூறுகையில், ”கேரளாவில் இருந்து வரும் வாகனங்களும், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களும் நிறுத்தப்பட்டு, அதில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்ன பரிசோதனை செய்கின்றோம். அதன் பின் அவர்களுக்கு ‘நிபா’ வைரஸ் தொடர்பான அறிவுரை வழங்குகிறோம்,” என்றனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை வட்டாரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் என அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு, நோயாளிகள் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
அதிக நாள் காய்ச்சல் உள்ளவர்கள், தலைவலி உள்ளவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் ரத்த மாதிரி பரிசோதனைகளும் எடுக்கப்படுகிறது.—–
பழம்… கவனம்!
பொதுமக்கள் பழங்களை நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும். தோட்டத்தில் அணில் அல்லது வேறு பறவைகள் கடித்த பழங்களை உண்ணக்கூடாது. பயன்பாடு இல்லாத நீர்நிலைகள், கிணறு பகுதிகளுக்கு செல்லக்கூடாது.
பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து பன்றிகளுக்கும், மனிதர்களுக்கும், நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. தொற்று தீவிரமடையும் பட்சத்தில் சுவாச கோளாறு மற்றும் மூளையில் வீக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் முககவசம் அணிவது நல்லது.
– சியாமளா,சுகாதார மேற்பார்வையாளர்,காரமடை வட்டாரம்
Leave a Reply