கோவை; மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், நொய்யல் ஆற்றுப்படுகையை ஒட்டிய விளை நிலங்களில் போர்வெல் அமைத்து, அதிலிருந்து தண்ணீர் எடுத்து மினரல் வாட்டராக விற்பனை செய்வதால், விளை நிலங்களில் பொத்தல்கள் விழுந்து, கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது.கோவையின் வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் உயர்ந்து நிற்கும் மலைகளிலிருந்து சின்னாறு, பெரியாறு, நீலியாறு, தொள்ளாயிரம் கண்டியாறு ஆகிய நான்கு ஆறுகள் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட சிற்றோடைகளிலிருந்து, நொய்யல் உற்பத்தியாகிறது.
ஆலாந்துறைக்கு அருகே உள்ள, தொம்பிலிபாளையத்தில் நான்கு ஆறுகளும் சிற்றோடைகளும் இணைந்து , அங்கு நொய்யல் உற்பத்தியாகி, கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களை கடந்து கரூரிலுள்ள நொய்யல் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.

நொய்யல் துவங்கும் இடத்திலிருந்து, பேரூர் படித்துறை வரை சுமார், 16 கி.மீ., தொலைவுக்கு ஆற்றுப்படுகையில், தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில், ஏராளமான விவசாய விளை நிலங்கள் உள்ளன.
உறிஞ்சும் நிறுவனங்கள்
இந்த விவசாய நில உரிமையாளர்களுடன், செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், குறைந்தபட்ச நிலத்தை விலைக்கு வாங்குவதன் அடிப்படையிலும், நொய்யல் ஆற்றுப்படுகை மற்றும் அதற்கு அருகே உள்ள விளை நிலங்களில், ‘மினரல் வாட்டர்’ நிறுவனங்கள் போர்வெல் அமைக்கின்றன.
குறைந்த பட்சம் 50 முதல் 100 அடியிலேயே, அங்கு தண்ணீர் கிடைக்கிறது. ஏனென்றால் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை மற்றும் செறிவூட்டு கிணறுகள் இருப்பதால், நிலத்தடிநீருக்கு பஞ்சமில்லை.
நிறைய போர்வெல்களை அமைத்து மினரல் வாட்டர் கேன்களிலும், சிறிய பாட்டில்களிலும் தண்ணீரை அடைத்து விற்பனை செய்கின்றனர்.
நொய்யலை ஒட்டி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே ஒரு மினரல் வாட்டர் நிறுவனம் மட்டுமே இருந்தது. அதன் எண்ணிக்கை தற்போது படிப்படியாக உயர்ந்து, தற்போது 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றன.நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததாலும், தொடர்ந்து போர்வெல்கள் அமைப்பதாலும், அங்குள்ள விளைநிலங்களில் நிறைய பொத்தல்கள் விழுகின்றன.
இது நிலத்திற்கான பிணைப்பில் இழப்பு ஏற்படுத்துகிறது. பல்வேறு ரசாயன மாற்றங்களையும் விளைநிலங்களில் ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக, நொய்யல் ஆற்றுப்படுகைக்கு சற்று தொலைவில் உள்ள விவசாய விளை நிலங்களில், நிலத்தடிநீர் மட்டம் மெல்ல குறைந்து தற்போது, 750 முதல் 1,000 அடியாக குறைந்து விட்டது.
பெரும்பாலான கிணறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றுப்படுகையில் இயற்கைக்கு முரணாக, வியாபாரத்திற்காக மினரல் வாட்டர் நிறுவனங்களை அமைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அப்புறப்படுத்த வேண்டும்
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி கூறியதாவது:
நொய்யல் ஆற்றுப்படுகையை செப்பனிட்டு, பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல; பொதுமக்கள், விவசாயிகள் என்று அனைத்து தரப்பினரது கடமையும் கூட. சில நிறுவனங்கள் நொய்யல் ஆற்றுப்படுகையிலேயே, 50 அடி ஆழத்தில் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுக்கின்றன.
இன்னும் சிலர் நொய்யலை ஒட்டிய இடத்தில், நில உரிமையாளருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, போர்வெல் அமைத்து பைப் போட்டு தண்ணீர் உறிஞ்சி எடுத்து பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
விவசாயிகள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி கூறுகையில், ”இந்த பிரச்னைக்கு ஆரம்ப காலம் முதலே நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் இது வரை பொதுப்பணித்துறையோ, மாவட்ட நிர்வாகமோ கண்டு கொள்ளவில்லை. இந்த விஷயத்தில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.
Leave a Reply