வால்பாறை; வால்பாறை அருகே, வாகனங்களை வழிமறிக்கும் ‘கபாலி’ என்ற ஒற்றை யானையால், சுற்றுலா பயணியர் பீதியடைந்துள்ளனர்.வால்பாறை — சாலக்குடி ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், இருமாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் சென்று வருகின்றனர். இந்நிலையில், வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

பகல் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் ரோட்டை கடப்பதால், சுற்றுலா வாகனங்கள் அதிவேகமாக செல்லும் போது விபத்தும் ஏற்படுகிறது. குறிப்பாக, இந்த ரோட்டில் இருசக்கர வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணியர் யானைகளிடம் சிக்கி உயிர்தப்பிய சம்பவமும் நடந்துள்ளது.
இந்நிலையில், அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில் வாழச்சால் அருகே முகாமிட்ட ‘கபாலி’ என்ற ஒற்றை யானை, அந்த வழியாக காரில் வந்த சுற்றுலா பயணியரை வழிமறிந்தது. இதனையடுத்து காரில் இருந்தவர்கள் தப்பி ஓடி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
அதற்கு பின்னால் வந்த வாகனங்களையும் யானை விரட்டியதால், வால்பாறை – அதிரப்பள்ளி ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பின் போக்குவரத்து சீரானது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வால்பாறை – அதிரப்பள்ளி ரோட்டில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால், வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும். யானை உள்ளிட்ட வனவிலங்குகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை சுற்றுலா பயணியர் தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்,’ என்றனர்.
Leave a Reply