அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவை உளவியல் ஆலோசனை

கோவை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனையும், வாழ்க்கை நெறிப் பாட வகுப்புகளும் முறையாக பள்ளிகளில் நடைமுறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளிகளில், பாடநெறி வகுப்புகள் சரிவர நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பல்வேறு சமூக பின்னணியிலிருந்து வரும், அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்புகள் இல்லாததால், அவர்கள் தவறான வழிகளில் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல், ஆசிரியர்கள் சிலநேரங்களில் திணறி விடுகின்றனர். ஒருசில மாநகராட்சிப் பள்ளிகளில் தன்னார்வலர்கள் உளவியல் சார்ந்த வகுப்புகளை நடத்தினாலும், பெரும்பாலான பள்ளிகளில் இவை முறையாக செயல்பாட்டில் இல்லை என கூறப்படுகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘பள்ளிகளில் புகார் பெட்டிகள் உள்ளன. பள்ளி சார்ந்த பிரச்னைகள், சில சமயங்களில் தனிப்பட்ட பிரச்னைகளையும் மாணவர்கள் எழுதிப் போடுகின்றனர். அவற்றை நாங்கள் கவனித்து வருகிறோம். எனினும், மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனை வகுப்புகளை, ஒரு உளவியல் நிபுணர் செய்யும் அளவிற்கு எங்களால் செய்ய இயலாது. பாடம் சார்ந்தே எங்களின் ஆலோசனைகள் அமையும் என்றனர்.