கோவை; வரி விதிப்புகளில் தொடரும் குளறுபடியால், மக்கள் மாநகராட்சி அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்படும் அவலம் நிலவும் நிலையில், இதை சாதகமாக்கி ‘தில்லு முல்லு’அலுவலர்கள் பணம் பார்க்கின்றனர்.கோவை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வகைகளில் வருவாய் கிடைத்து வருகிறது. மொத்தம், 5.87 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகின்றனர். நடப்பு நிதியாண்டில் மொத்த வரியினங்களாக, ரூ.766.43 கோடி வசூலிக்க வேண்டும்.

2023-24ம் நிதியாண்டில், 90.45 சதவீதம் சொத்து வரி வசூலித்து மாநகராட்சி சாதனை புரிந்தது.இதையடுத்து, பில் கலெக்டர்கள் வாயிலாக வரி வசூல், வரி நிர்ணயம் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
அதேசமயம், வரியை மாற்றி விதிக்கும் குளறுபடிகள்நடப்பதாக, பொது மக்கள் குமுறுகின்றனர். இதை சாதகமாக்கி நேர்மையற்ற வருவாய் பிரிவு அலுவலர்கள் பணம் பார்ப்பதாகவும், இதற்கென நேர்மையான பில் கலெக்டர்கள், பகடைக்காயாவதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது.
சேரன் நகரை சேர்ந்த விஜயா கூறுகையில்,”58வது வார்டு, சேரன் நகரில் குறுந்தொழில் செய்துவரும் எனக்கு, வணிக பயன்பாட்டு கட்டடம் என்று முதலில் குறிப்பிட்டனர். பின்னர் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த மனுக்களை தொடர்ந்து, குறுந்தொழிற்சாலை கட்டடம் என மாற்றினர். ஆனால், வணிக பயன்பாட்டு கட்டடத்துக்கான வரியையே இன்றும் வசூலிக்கின்றனர்.ஐந்து மாதங்களுக்கு மேல் அலைகிறோம்,” என்றார்.
குடிநீரில் குழப்பம்
பொம்மனாம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் கூறுகையில்,’மேற்கு மண்டலம், 38வது வார்டு டான்சா நகரில் எனது வீட்டுக்கு கடந்த, 2021ம் ஆண்டு மே, 3ம் தேதிதான் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், 2020ம் ஆண்டு ஏப்., முதல் குடிநீர் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. வராத குடிநீருக்கு எப்படி கட்டணம் செலுத்த முடியும். எங்களை வேண்டுமென்றே அலைக்கழிக்கின்றனர்,” என்றார்.
‘ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்’
இந்த பிரச்னை தொடர்பாக, உரிய ஆவணங்களுடன் மனு அளித்தால் சரி செய்துதரப்படும். வருவாய் பிரிவினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு, வரி புத்தகம் வழங்குவதை ஆதாரங்களுடன் புகார் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
-சிவகுரு பிரபாகரன்
மாநகராட்சி கமிஷனர்
Leave a Reply