வால்பாறை; நகரிலுள்ள நீர்நிலைகளில் குப்பை கொட்டி மாசுபடுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுக்குட்பட்ட குடியிருப்புகள் தனியார் எஸ்டேட் வசம் இருப்பதால், அங்கு நகராட்சி சார்பில் குப்பை அள்ளுவதில்லை.

வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறுநகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் மட்டும் நகராட்சி சார்பில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.வால்பாறை நகரில் சேகரிக்கப்படும் குப்பை, ஸ்டேன்மோர் ரோட்டில் உள்ள திறந்தவெளி கிடங்கில் கொட்டப்படுகிறது; இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணியும் படிப்படியாக நடந்து வருகிறது.
அண்ணாநகர் முதல் வாழைத்தோட்டம் டோபி காலனி வரையிலும், காமராஜ்நகர் முதல் சிறுவர்பூங்கா வரையிலும் உள்ள ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் வெளியாகும் கழிவுகளை ஆற்றில் நேரடியாக கொட்டி விடுகின்றனர். சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக இந்த ஆறுகளில் குப்பைகள் கொட்டப்படுவதால், நீர்நிலைகள் மாசுபடுதோடு, சமவெளிப்பகுதியில் உள்ள மக்கள் கழிவு நீரை பயன்படுத்த வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.
வால்பாறை நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ‘துாய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணி நடைபெற்று வருகிறது. வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் கழிவுகளை நகராட்சி துாய்மை பணியாளர்கள் நாள்தோறும் நேரடியாக வாங்கி செல்கின்றனர். ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவர்களின் வீடுகளில் வெளியாகும் குப்பைக்கழிவுகளை ஆற்றில் வீசுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாகிறது. ஆறுகளில் குப்பை, கழிவுகள் கொட்டினால் இனி உடனடியாக அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நகராக இருப்பதால், சுற்றுலா பயணியரும், திறந்தவெளியில் கழிவு கொட்டுவதை தவிர்க்கவேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
Leave a Reply