உயிர்தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பு

கோவை; கோவையில்நேற்று துவங்கிய தேசிய கருத்தரங்கில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த மாணவர்கள், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில், தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பவியல் துறைகள் சார்பில், ‘உயிர்தொழில்நுட்பத்தின் வாயிலாக எதிர்கால வளர்ச்சி,பொருளாதாரம், சூழல் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தேசிய கருத்தரங்கம்’ நேற்று துவங்கியது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் துவங்கிய கருத்தரங்கில், கல்லுாரி முதல்வர் ஹாரதி வரவேற்றார். கல்லுாரி செயலர் யசோதா தேவி பேசினார்.

திருவனந்தபுரம், ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அருணாசலம், மருத்துவச் செயல்களில் மரபணு மூல தாவர பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உலகளாவிய சூழலியல் மற்றும் பொருளாதார சவால்களை சமாளிக்க, உயிர்தொழில்நுட்பம் வகிக்கும் முக்கிய பங்கு குறித்து விளக்கினார். மைசூர், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராயச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி கோபிநாத் மீனாட்சி சுந்தரம், ஊட்டச்சத்து உயிரியல் மற்றும் மருத்துவத் தொழில்நுட்ப சிகிச்சைகள் குறித்து தெரிவித்தார்.சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி கிருபாகர் பார்த்தசாரதி, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டில் ஏற்பட்ட புதிய முனைப்புகள் குறித்து விளக்கினார்.

ஐதராபாத், டி.என்.ஏ., கைரேகை மற்றும் மூலக்கூறு நோயறிதல் மைய விஞ்ஞானி ஸ்ரீவாஸ்தவா, மரபணு கண்டறிதல் மற்றும் மூலக்கூறு நோயறிதல் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

நேற்றைய நிகழ்வில், தொழில்நுட்ப அமர்வுகள், வாய்மொழி மற்றும் விளக்கக்காட்சியுடன் முக்கிய உரைகள் இடம்பெற்றன. இவை, உயிர் உற்பத்தி, ஜீன் சிகிச்சை, நிலைத்த வேளாண்மை, செயற்கை உணவுகள், காலநிலை மாற்றத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கியவையாக இருந்தன. கல்லுாரியின் மாணவர் விவகாரங்கள் துறை தலைவர் வசந்தா உட்பட பலர் பங்கேற்றனர். மீடியா பார்ட்னராக ‘தினமலர்’ நாளிதழ் விளங்கியது.

இரண்டாவது நாளாக இன்று, மேலும் பல முக்கிய தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் குழு விவாதங்களுடன் தொடரவுள்ளது.மொத்தம், 180 மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கின்றனர்.