போதையில் வாகனம் ஓட்டியோருக்கு அபராதம் விதிப்பு! ஆறு மாதங்களில் 5,401 வழக்கு பதிவு

கோவை; மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக, ஆறு மாதங்களில், 5,401 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு, ரூ.5.40 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.நாட்டில் அதிக சாலை விபத்து, இறப்பு நிகழ்வது தமிழகத்தில் தான் என, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும், போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதை கட்டுப்படுத்த, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், போக்குவரத்து விதிமீறல்கள், அதனால் ஏற்படும் விபத்துகள் அதிகரிக்கின்றன.
அபராதம் குறைவாக இருந்ததால், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எவ்வித அக்கறையும் இல்லாமல் இருந்தது. ஒரு வழிப்பாதையில் செல்வது, ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் இயக்குவது, மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களை, விதிமீறல்களாகவே கருதுவதில்லை.இதனால், அபராத தொகையை அதிகரித்து விபத்துகளை குறைக்க, மத்திய அரசு, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, 2019ல் அபராத தொகையை பன்மடங்கு உயர்த்தியது.

2022, அக்., மாதம் தமிழக அரசு, மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டத்தின்படி, மது போதையில் வாகனம் ஓட்டினால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

கோவையில், மதுபோதையில் வாகனம் ஓட்டியது குறித்து, கடந்த ஆறு மாதங்களில், 5,401 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர்களிடம் நடமாடும் நீதிமன்றம் வாயிலாக, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், 2,388, மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், 1,815, மாநகர சட்டம் – ஒழுங்கு போலீசார், 1,198 என, மொத்தம், 5,401 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு, ரூ.5.40 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.