வால்பாறை; வால்பாறையில், ரோட்டில் சுற்றும் வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணியர் உணவு வழங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.ஆழியாறிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில், வரையாடு, சிங்கவால்குரங்குகள், மான், காட்டுமாடு, யானை போன்ற வனவிலங்குகள் பகல் நேரத்திலேயே நடமாடுகின்றன. மலைப்பாதையில் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணியர், வனவிலங்களுக்கு உணவு வழங்குகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை நகர் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பகல் நேரத்தில் கடைவீதி வழியாக வந்த மானுக்கு, சுற்றுலா பயணியர் ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர். இந்த செயலுக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது:வால்பாறை நகரில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் கூட உணவு தேடி, சிங்கவால்குரங்குகள், மான், யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.
இது போன்ற சூழ்நிலையில், மனித — வனவிலங்கு மோதல் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்படுகிறது. வால்பாறைக்கு சுற்றுலா வருவோர் தங்களது வாகனங்களை ரோட்டில் நிறுத்தி, வனவிலங்குகளுக்கு உணவு வழங்குகின்றனர். இதனால், வனவிலங்குகளின் இயல்பான உணவு தேடும் பழக்கம் மாறி விடுகிறது.
அதனால், வனவிலங்குகளுக்கு உணவு வழங்குபவர்கள் மீது வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
Leave a Reply