கோவை; ‘மருத்துவ கல்லுாரி ஐ.சி.சி., கமிட்டிகளில் மாணவர்கள் பிரதிநிதி மற்றும் வழக்கறிஞர் அல்லது போலீஸ் பிரதிநிதி கட்டாயம் இடம் பெற வேண்டும்’ என, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தின் படி, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாலியல் அத்துமீறல்கள், பிற புகார்களை விசாரிக்க, உள் புகார் குழுவான ஐ.சி.சி., அமைக்கப்பட வேண்டும். இது, மருத்துவ கல்லுாரிகளுக்கும் பொருந்தும்.

தமிழகத்தில், செயல்படும் மருத்துவ கல்லுாரிகளில் இக்கமிட்டி பெயரளவில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இக்குழுக்களில், கல்லுாரி பேராசிரியர்களே இடம் பெறுவதால், புகார்கள் மறைக்கப்படுவதாகவும், புகார் அளித்தவர்கள் மீது தேவையற்ற பழிகள் சுமத்துவதாகவும், அதிருப்தி நிலவுகிறது.
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
மருத்துவ கல்லுாரிகளில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல் செயல்பாடு தொடர்ந்து நடைபெறுகிறது. சில நிகழ்வுகள் மட்டுமே பொதுவெளிக்கு வருகின்றன. தயக்கத்தை விட்டு புகாரை சொல்பவர்கள் மீதே, தேவையற்ற பழிகளை சொல்கின்றனர்.
பல மருத்துவ கல்லுாரிகளில், இக்குழு பெயரளவில் மட்டுமே உள்ளது. இக்குழு பொறுப்பாளர்கள், பல நேரங்களில் போன் அழைப்பை எடுப்பதில்லை.
இக்கமிட்டி முழுமையாக செயல்படுவதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இக்குழுவில், மாணவர் பிரதிநிதி ஒருவர், வழக்கறிஞர் அல்லது போலீசார், சமூக ஆர்வலர்களை கட்டாயம் சேர்க்க வேண்டும்.
Leave a Reply