மேட்டுப்பாளையம்; பவானி சாகர் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால் வாழைகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.பவானி சாகர் அணையில் நீர்மட்டம் குறையும் பொழுது, தண்ணீர் தேங்கி இருந்த பகுதிகளில் உள்ள காலி இடத்தில், விவசாயிகள் வாழை பயிர் செய்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 80 அடியாக குறைந்தது.

தண்ணீர் தேங்கி இருந்த இடம் காலியாக இருந்ததால், சித்தன் குட்டை, ஜெ. ஜெ., நகர், சிறுமுகை, லிங்காபுரம், காந்த வயல், வச்சினம்பாளையம், திம்மராயம்பாளையம், மூலையூர் ஆகிய பகுதிகளில், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில், வாழைகளை விவசாயிகள் பயிர் செய்து இருந்தனர். இதில் சிலர் வாழைத் தார்களை அறுவடை செய்துள்ளனர்.இந்நிலையில் தென்மேற்குப் பருவ மழை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 100 அடியை எட்டி இருந்தது. ஆற்றின் கரையோரம் தண்ணீர் தேங்கி இருந்த பகுதிகளில் உள்ள, வாழை தோட்டத்தில் தண்ணீர் புகுந்து தேங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இது குறித்து சித்தன் குட்டை, ஜெ.ஜெ. நகர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
ஒரு வாழைக்கு அதிகபட்சம், 150 ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். தார்கள் அறுவடை செய்ய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். இந்நிலையில் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால், வாழை தோட்டங்களில் தண்ணீர் புகுந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, கருணை அடிப்படையில், தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Leave a Reply