ஆனைமலை; ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், இயந்திர நடவு செய்த விவசாயிகள் மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை சுற்றுப்பகுதியில், ஆழியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில், ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில், நெல் சாகுபடியில் போதிய லாபம் இருந்ததால், மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை முதல் போகமும், செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இரண்டாம் போகமும் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
சில ஆண்டுகளாக பருவமழை இல்லாதது, அணையில் நீர் இருப்பு இல்லாததுபோன்ற காரணங்களினால் இரண்டு போக சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஆண்டுதோறும் இரு போக சாகுபடிக்கு குறிப்பிட்ட காலத்தில்தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நடப்பாண்டில், கடந்த மே மாதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் நீர் இருப்பு மற்றும் பருவமழை கை கொடுத்ததால், நடப்பாண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதை பயன்படுத்தி,ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில், இரண்டாயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இயந்திரம் வாயிலாக, நடவு செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் மணிகண்டன் கூறுகையில், ”நெல் சாகுபடி பணிகள் தற்போது துவங்கியுள்ளது. கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் வயலில் களை எடுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நடப்பாண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதுடன், மழையும் கைகொடுத்ததால், பயனாக உள்ளது.
இயந்திர நடவு செய்வதற்கு குறைந்த பட்ச விவசாயிகளுக்கு மட்டுமே மானியம் வழங்காமல், அனைவருக்கும் வழங்கினால் பயனாக இருக்கும்,” என்றார்.
விவசாயி பட்டீஸ்வரன் கூறுகையில், ”தனியார் வாயிலாக இயந்திரங்களை பயன்படுத்தி இயந்திர நடவு செய்யப்படுகிறது. இதற்கு அரசு மானியம் வழங்குகிறது. இயந்திர நடவு செய்வதற்கு ஏக்கருக்கு, நான்காயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, 65 விவசாயிகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்பட்டது. அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்!
வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இயந்திர நடவு செய்ய ஏக்கருக்கு, நான்காயிரம் ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டது.தனியார் இயந்திரம் வாயிலாக நடவு செய்ய, ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும். அதனால், மீதமுள்ள மூவாயிரம் ரூபாயை விவசாயிகள் செலவிட வேண்டும். வடக்கலுார் அம்மன் கோவில் பகுதிகளில், 53 பொது விவசாயிகள், 10 ஆதிதிராவிடர் விவசாயிகள், இரண்டு பழங்குடியின விவசாயிகள் என மொத்தம், 65 விவிசாயிகளு க்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அவர்களுக்கு அரசு கூறியபடி மானியம் வழங்கப்பட்டது. அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு கொண்டு செல்லப்படும்,’ என்றனர்.
Leave a Reply