ஐந்து ஆண்டுகளில் ரூ.5.22 கோடி மீட்பு; மாவட்ட சைபர் கிரைம் நடவடிக்கை

கோவை; கடந்த ஐந்து ஆண்டுகளில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், ரூ.5.22 கோடிகளை மீட்டுள்ளனர்.இந்தியாவில் மாதந்தோறும், ரூ.1500 கோடி வரை ஆன்லைன் மோசடியில் பணம் இழக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை மோசடி செய்வதில் துவங்கி, ஆன்லைனில் டாஸ்க், போக்குவரத்து விதிமீறல் லிங்க், பகுதி நேர வேலை இருப்பதாக லிங்க், டிஜிட்டல் கைது, போதைப் பொருள் கடத்தியது, பங்கு சந்தை உள்ளிட்ட பல்வேறு விதங்களில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. பொதுமக்களின் ஆசையை துாண்டி, பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்வது தொடர்ந்து கொண்டே உள்ளது.

கடந்த, 2021 முதல், ஜூலை, 2025 வரையிலான காலத்தில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மோசடி பேர் வழிகளிடம் இருந்து ரூ.5.22 கோடியை மீட்டுள்ளனர். கடந்தாண்டு மட்டும், 150 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு, 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட ரூ.2.26 கோடி மீட்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜூலை மாதம் வரை, 20 வழக்குகள் பதியப்பட்டு, 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டு பல்வேறு வங்கிக்கணக்குகளில் இருந்து மோசடி செய்யப்பட்ட ரூ.93 லட்சம் முடக்கப்பட்டது. அதில், மொத்தம், ரூ.68.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘ஆன்லைனில் நடக்கும் பண மோசடி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் சிறிய அளவு லாபத்துக்காக பெரிய தொகையை இழந்து விடுகின்றனர். ஏமாற்றப்பட்ட பின்னரும் விரைந்து போலீசாரிடம் புகார் அளிக்க வருவதில்லை. இதன் காரணமாக பணத்தை மீட்க முடியாமல் போகிறது. மேலும், வேறு ஒரு வங்கிக்கணக்கில் இருந்து பணம் வந்தால் அதற்கு உரிமை கொண்டாடக்கூடாது.

அது மோசடி செய்யப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து அனுப்பப்பட்டதாக இருக்கும். அப்போது அவர்களும் குற்றவாளியாக மாறிவிடுவர். அவர்கள் வங்கிக்கணக்கும் முடக்கப்படும். இதைத்தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,’ என்றனர்.