கோவையில் 7 மாதங்களில் சிக்கியது 134 கிலோ கஞ்சா! போதை ஒழிப்பில் போலீஸ் மும்முரம்

கோவை; கோவையில் கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. சமீப காலமாக கோவையில், போதை பொருட்களின் புழக்கம், பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஏழு மாதங்களில் 134 கிலோ கஞ்சா,74.9 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, அதிர்ச்சி தகவல் வெளி யாகியுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்குள் வரும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், புதுப்புது வழிகளில் கடத்தல் நடக்கிறது.

தற்போது, ஆன்லைன் டெலிவரி, கூரியர், தபால் வாயிலாக கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்களை தருவிக்க, இணையவழியும், ரயில்களும் பயன்படுத்தப்படுகின்றன. வடமாநிலத்தில் இருந்து, ரயில்களில்தான் அதிகளவில் கஞ்சா கடத்தப்படுகிறது. மொத்த வியாபாரிகளின் இலக்கு, கூலிவேலைக்காக கோவை வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் தான்.

போலீசார் தங்கள் கண்காணிப்பை கடந்த ஏழு மாதங்களில் அதிகளவு போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளன.போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்கிருந்து வருகிறது, மொத்த வியாபாரிகளின் தகவல்கள் உள்ளிட்டவைசேகரிக்கப்பட்டு வருகின்றன. மூலாதார இடத்தை அழித்தால் மட்டுமே போதைப் பொருட்கள் புழக்கத்தை குறைக்க முடியும். அதன் அடிப்படையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இணையவழியில் போதை மருந்துகள் விற்பனை குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள், இளைஞர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

எக்கச்சக்க

போதை வஸ்து

கடந்த ஏழு மாதங்களில், கோவையில் கஞ்சா, 134 கிலோ, மெத்தபெட்டமைன், 74.9 கிராம், 1,468 போதை மாத்திரைகள், 5 கிராம் ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 80 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களில் மட்டும் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து பதியப்பட்ட வழக்கில், 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.