கோவை; குப்பையில் இருந்து ‘பயோ காஸ்’ மற்றும் மின்சாரம் தயாரிப்பதாக கூறி, மதுக்கரை, வெள்ளலுார், சூலுார், திருப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார உள்ளாட்சி அமைப்புகளில் சேகரமாகும் குப்பையையும் வெள்ளலுார் கிடங்கிற்கு தருவிக்க, கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதவிர, தெருநாய் கருத்தடை சிகிச்சை மையத்தை விஸ்தரிக்கவும் தீர்மானித்துள்ளதால், தெற்கு பகுதி மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.கோவை மாநகர பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது.

மழைக்காலத்தில், 5 கி.மீ., சுற்றளவுக்கு துர்நாற்றம் வீசுவதால், சுற்றுவட்டார பகுதியில் வசிப்போர் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
கிடங்கை வேறிடத்துக்கு மாற்ற வேண்டுமென பல ஆண்டுகளாக மக்கள் கோருகின்றனர். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க, பல கட்டமாக போராட்டங்கள் நடத்தி விட்டனர். இருப்பினும், எதிர்ப்பை மீறி, அதே பகுதியில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது.
அடுத்த கட்டமாக, குப்பையில் ‘பயோ காஸ்’ மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை மாநகராட்சி முன்னெடுக்கிறது. ரூ.69.20 கோடியில் தனியார் பங்களிப்புடன், 250 டன் மக்கும் குப்பையில், ‘பயோ காஸ்’ தயாரிக்கும் திட்டத்தை துவக்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அடுத்ததாக, 600 டன் உலர் குப்பையில் மின்சாரம் தயாரிக்க, 450 கோடி ரூபாய்க்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு உலர் குப்பை மட்டும் தேவை.
கோவையில் சேகரமாகும் உலர் குப்பை போதுமானதாக இருக்காது என கருதுவதால், மதுக்கரை, வெள்ளலுார், சூலுார், பட்டணம், திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட வழித்தடங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சேகரமாகும் உலர் குப்பையை ஒருங்கிணைத்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே செயல்படும் கிடங்கை மூடச் சொல்லி வரும் நிலையில், சுற்றுப்பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சேகரமாகும் குப்பையையும் தருவித்தால், சுற்றுச்சூழல் மேலும் மாசடைய வாய்ப்புள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இச்சூழலில், குப்பை கிடங்கு வளாகத்தில் செயல்படும் தெருநாய் அறுவை சிகிச்சை மையத்தை, மூன்று கோடி ரூபாய் செலவில் விஸ்தரிப்பு செய்ய தீர்மானித்து, கூடுதலாக கூண்டுகள், அறுவை சிகிச்சை அரங்குகள், டாக்டர்கள் அறைகள் கட்டுவதற்கு முடிவு செய்திருக்கிறது. இது, தெற்கு பகுதி மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
‘மூச்சு விட
சிரமப்படுகிறோம்’
தெற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘வெள்ளலுாரில் தேக்கும் குப்பையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது; காற்று மாசால் மூச்சு விடுவதற்கு கூட சிரமம் ஏற்படுகிறது. மின்சாரம் தயாரிப்பதாக கூறி, குப்பையை டன் கணக்கில் தருவித்தால், வாழத்தகுதியற்ற நகரமாகி விடும். குப்பை கிடங்கை காரணம் காட்டி, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை மாநகராட்சி முடக்கியுள்ளது. ‘பயோ காஸ்’ மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை கொண்டு வந்தால், இனி, பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு வாய்ப்பே இல்லாத சூழல் ஏற்பட்டு விடும்’ என்றனர்.
Leave a Reply