பெண்கள், குழந்தைகளுக்கு… பாதுகாப்பு இல்லை! காரணங்களை அடுக்கி கொந்தளிக்கும் கோவை மக்கள்

த மிழகத்தில் இன்று பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில், கடந்த சில மாதங்களாக, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து, கோவை மக்கள் சிலரிடம் பேசினோம்…! ‘ஆண்களே காரணம்’ பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. ஆண்கள் சரியாக இல்லாததே காரணம். வளர்ப்பு சரியாக இருந்தால், தவறு செய்ய அச்சப்படுவார்கள். சிறு வயது முதல் பெண்களை மதிக்கக் கற்றுத்தர வேண்டும். அப்போது தான் இதுபோன்ற குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். – -கிருத்திகா சுயதொழில், வெள்ளலுார்

‘பாதுகாப்பு உள்ளது’ பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளது. யாரோ ஒரு சிலர் செய்யும் தவறால், அரசை குற்றம் சொல்ல முடியாது. தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும். அது, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். – டிரினிட்டா பெர்னான்டோ ஆசிரியர், சோமனுார்

‘சட்டங்களை கடுமையாக்கணும்’ பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதிகளவில் நடக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும். சட்டங்களையும், தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் தவறு செய்ய பயம் வரும். – காவியா கல்லுாரி மாணவி, சின்ன தாராபுரம்’அரசே 90 சதவீதம் காரணம்’ பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது முற்றிலும் உண்மை. 90 சதவீதம் குற்றங்களுக்கு அரசு மட்டுமே காரணம். பல பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளன. மது, போதைப்பொருட்கள் தான் இதற்கு முக்கிய காரணம். அரசு இவற்றை தடுக்க வேண்டும். -இளங்கோவன் சுயதொழில், பெ.நா.பாளையம்

‘போதை பழக்கம்தான் காரணம்’ கடந்த 15 ஆண்டுகளாக மது, போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இதைத்தடுக்க கடும் சட்டங்கள் வேண்டும். – செல்வராஜ் ரியல் எஸ்டேட், அசோக் நகர்

‘மிகுந்த வேதனை அளிக்கிறது’ பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதற்கு அரசு தரப்பில் தக்க நடவடிக்கைகள் இல்லாததே காரணம். ஒவ்வொருவரும் இதுகுறித்து அக்கறை கொள்ள வேண்டும். –கார்த்திக் கால் டாக்ஸி டிரைவர், எஸ்.ஐ.எச்.எஸ்.,காலனி

‘பாதுகாப்பு இல்லை’ பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாத சூழலே உள்ளது. வீட்டில் இருந்து கிளம்பி, வேலைகளை முடித்து விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் என்ன நடக்கும் எனத் தெரியவில்லை. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – நிர்மலா வீட்டு வேலை, புலியகுளம்

‘அச்சத்தில் பெண்கள்’ தமிழகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. தனியாக இருக்கும் பெண்கள் தங்களுக்கு எப்போது என்ன நடக்கும் என, தெரியாமல் அச்சத்தில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை அரசு மாற்ற வேண்டும். நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும். – முருகேஷ் டெய்லர், அம்மன்குளம்