குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் இன்டர்நெட் போதை! மாதந்தோறும் 30 பேருக்கு சிகிச்சை

கோவை; கோவை அரசு மருத்துவ மனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு மையத்தில், மாதந்தோறும் ‘இன்டர்நெட் அடிக்சன்’ பிரிவில், 25 முதல் 30 குழந்தைகள், சிகிச்சைக்கு வருவதாக தெரியவந்துள்ளது. தங்கள் குழந்தைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கடந்த பிப்., மாதம், மாநிலம் முழுவதும் ‘கலங்கரை’ என்ற பெயரில் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு மையம் திறக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையிலும், 20 படுக்கை வசதியுடன் இம்மையம் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

தொழில்நுட்பங்களால் மனரீதியாக பாதிக்கப்படும், குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை இம்மையத்தில் வழங்கப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் மனநலப்பிரிவினர், இதற்கான சிகிச்சை அளிக்கின்றனர்.ஏராளமான குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. மூன்று குழந்தைகள் தங்கி சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ” குழந்தைகள் மத்தியில் ‘ஸ்கிரீன் டைம்’ என்பது, உளவியல்ரீதியாக மட்டுமல்ல, உடல் ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. மொபைல், வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் பயன்பாடு என்ற பிரிவுகளில், மாதந்தோறும் 25 முதல் 30 குழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றனர். பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும்,” என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத, அரசு மருத்துவமனை மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில் கூறுகையில், ” கோவை அரசு மருத்துவமனையில், புதிதாக துவக்கப்பட்ட குழந்தைகளுக்கான மீட்பு மையத்தில் இரண்டு பெட் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டது. இதில், 100 முதல் 200 வரை மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. தங்கி சிகிச்சை பெற்றவர்கள் குறைவு என்றாலும், கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மொபைல் போன் மட்டுமல்ல, டி.வி., கம்ப்யூட்டரும், ‘ஸ்கிரீன் டைம்’ என்ற பிரிவில் வரும். ஆரம்பத்திலேயே தீர்வு கண்டு விட்டால், மாணவர்கள் பெரிதாக பாதிக்கப்படமாட்டார்கள். பிள்ளைகள் மொபைல் போனில் என்ன பார்க்கின்றனர், என்ன விளையாடுகின்றனர் என்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.