வால்பாறை; பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.வால்பாறை நகராட்சியில், 52 துாய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு, பி.எப்., பிடித்தம் போக, 450 ரூபாய் தினக்கூலியாக வழங்கப்படுகிறது.இந்நிலையில், கலெக்டர் அறிவித்துள்ள படி, 700 ரூபாய் கூலி வழங்க வேண்டும். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் கடந்த, 4 மற்றும் 6ம் தேதிகளில், நகராட்சி அலுவலக வளாகத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் கணேசன் போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களிடம், ஒப்பந்தாரர் முன்னிலையில் பேசி பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தன் பேரில், துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக நேற்று மாலை ஒப்பந்தாரர், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அதில், துாய்மை பணியாளர்களுக்கு, தினக்கூலியாக 500 ரூபாய் உயர்த்தி வழங்கவும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட துாய்மை பணியாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறப்பட்டதாக தெரிவித்தனர்.
Leave a Reply