சூலுார்:துண்டான மனித கை கிடந்த வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. கையை இழந்தவர் சிகிச்சையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.கோவை மாவட்டம், சூலுார் அடுத்த கள்ளப்பாளையத்தில், சுதாகர் என்பவருக்கு சொந்தமான பேப்பர் கோன் இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இரு நாட்களுக்கு முன், ஸ்டோர் ரூம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கை கிடந்தது. இதுகுறித்து, சூலுார் போலீசார் விசாரித்தனர்.

மோப்ப நாய் சோதனை யில் அப்பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகள் எரிக்கும் நிறுவனம் அருகில் சென்று மோப்ப நாய் நின்றது. இதையடுத்து, அந்நிறுவனத்தில் போலீசார் விசாரித்தனர்.
அதில், கோவை அரசு மருத்துவமனையில், கை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் சிகிச்சை பெறுவது தெரிந்தது. அந்நபரை விசாரித்ததில், பல தகவல்கள் கிடைத்தன.போலீசார் கூறியதாவது:
திருப்பூர் வலையங்காட்டை சேர்ந்த கூலி தொழிலாளி அழகு பாண்டி, 28. இரு தினங்களுக்கு முன் மது போதையில், தற்கொலை செய்து கொள்ள, திருப்பூர் ஆண்டிபாளையம் அருகே ரயில் முன் பாய்ந்ததில், வலது கை துண்டானது. காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளர்.
பரிசோதித்த டாக்டர்கள், ‘துண்டான கையை இணைக்க முடியாது’ என, கூறிவிட்டனர். இதையடுத்து, துண்டான கை, மருத்துவ கழிவுகளுடன், கள்ளப்பாளையத்தில் உள்ள கழிவு எரிக்கும் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கிருந்து தான் துண்டான கையை நாய் கவ்வி சென்று பேப்பர் கோன் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் போட்டது தெரிந்தது.
இவ்வாறு, போலீசார் கூறினர்.
Leave a Reply