கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகாவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்கள் தங்குவதற்கென்று, 38 விடுதிகள் உள்ளன. இதில் 9 விடுதிகளில் உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கும் பணியை, தனியார் வசம் ஒப்படைத்துள்ளது அரசு.

இங்கு தங்கியிருக்கும் மாணவர்களுக்கு, அன்றாடம் மூன்று வேளைக்கு தனி மெனு நிர்ணயித்து, அதற்கேற்றாற் போல் சுவையான உணவு வழங்கப்படுகிறது.
வாரம் இரண்டு நாட்களில், ஒரு நாளைக்கு கோழியும், மற்றொரு நாள் ஆட்டிறைச்சியும் தயாரித்து வழங்கப்படுகிறது.
இதே நடைமுறையை, அனைத்து சமூக நீதி விடுதிகளுக்கும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
துடியலுாரிலுள்ள வெள்ளக்கிணறு சமூக நீதி விடுதியில், 15 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் சேரன்நகர் அருகே உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கின்றனர். இம்மாணவர்களுக்கு காலையும், இரவும் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது.
காலை நேரத்தில் இட்லியும், இரவு நேரத்துக்கு உப்புமா மட்டுமே வழங்கப்படுகிறது. வழக்கமாக இரவு நேரத்தில், விலை குறைந்த, எளிதில் தயாரிக்கும் உப்புமாவை கிளறி கொட்டுகின்றனர். இதை பெரும்பாலான மாணவர்கள் சாப்பிடுவதில்லை. பாதி வயிறு கூட நிரம்பாமல், பசியுடனே துாங்கி விடுகின்றனர்.
பாதிப்புக்குள்ளான மாணவர்கள், கடந்த இரண்டு நாட்களாக உணவு உட்கொள்ளாமல் வார்டன் சிங்கபாண்டியனிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதோடு, தங்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்; கலெக்டரிடம் முறையிடுவோம் என்று ஒரு சில மாணவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து இதே நிலை நீடிக்கிறது.
இது குறித்து, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மணிமேகலை கூறியதாவது:
உண்மை நிலவரம் குறித்து விசாரிக்கிறேன். நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்கிறேன். மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்கும் பணியை, தனியாருக்கு டெண்டர் விடுவது அரசின் முடிவாகும்.
தற்போது கோவை மாவட்டத்தில், 9 சமூக நீதி விடுதிகளில் ஒரு தனியார் நிறுவனம், உணவு தயாரித்து வினியோகிக்கிறது. அங்கு இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. வார்டன்கள் மேற்பார்வையில், உணவு தயாரிக்கப்படும் இடத்தில் இது போன்று பிரச்னை ஏற்படும். கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, மணிமேகலை கூறினார்.
‘சமூக நீதி விடுதி’ என்று விடுதியின் பெயரை மட்டும் மாற்றினால் போதாது; அங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு மூன்று வேளையும் வயிறார உணவு அளிக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே, சமூக ஆர்வலர்களின் கருத்து.
Leave a Reply