2035க்குள் ‘இஸ்ரோ’வின் விண்வெளி நிலையம் அமையும்

கோவை; கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி நிறுவனர் தின விழா, நேற்று நடைபெற்றது. பி.எஸ்.ஜி., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ தயாரித்த, இஓஎஸ்-09 செயற்கைக் கோள், தோல்வியடைந்தது குறித்து அமைக்கப்பட்ட, குழுவின் விரிவான அறிக்கை, பிரதமரிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

நிலவில் சிறந்த புகைப்படம் எடுக்கும் கேமரா தொழில்நுட்பம், இந்தியாவிடம் மட்டுமே உள்ளது. ராக்கெட் இன்ஜின் டெக்னாலஜியில், இன்ஜின் சோதனையை 28 மாதங்களில் செய்தது; விரைவாக செலுத்தியது; ஸ்டேஜ் லெவல் டெஸ்ட் விரைந்து முடித்தது போன்ற, மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளது. இதனை முறியடிக்க, மற்ற நாடுகளுக்கு 50 ஆண்டுகள் தேவைப்படும்.

இஸ்ரோவின் 56 செயற்கைக்கோள்கள், பூமியைச் சுற்றி வருகின்றன.
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும்திட்டத்தில் பயன்படும், எல்.வி.எம்-3 ராக்கெட் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

2035க்குள் இஸ்ரோ தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும். 2040ல் விண்வெளி துறையில் இந்தியா முன்னணி நாடாக மாறும்.

2047ல் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி, முழுமையாக வளர்ந்த நாடாக மாறும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னாள் மாணவர்களுக்கு கவுரவம்

விழாவில், கல்லுாரியின் முன்னாள் மாணவர்களான, ஐதராபாத் இந்தியன் இம்யூனாலஜிக்கல் நிறுவனம் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மதுரை அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், ஐதராபாத் சி.எஸ்.ஐ.ஆர். தேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் முதன்மை விஞ்ஞானி ராஜ்குமார், டில்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு பேராசிரியர் டாக்டர் முரளி கல்லும்மல், சேலம் எஜூகேஷன் வேல்யூ கிரியேட்டர்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் ஹெலிக்ஸ் ஓபன் ஸ்கூல் தலைவர் செந்தில்குமார் மற்றும் கோவை வருமான வரி கூடுதல் ஆணையர் ராணி காஞ்சனா ஆகியோருக்கு, ‘சிறந்த முன்னாள் மாணவர் விருது – 2025’ வழங்கப்பட்டது