அமெரிக்க வரி விதிப்பு அமலானால் நுாற்பாலைகளுக்கு சிக்கல் வரும்

மேட்டுப்பாளையம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதம் வரி விதிப்பை முன்மொழிந்துள்ளார். இது அமலுக்கு வந்தால், கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், பொயநாயக்கன்பாளையம், சோமனுார் உள்ளிட்ட பகுதிகளில் நூற்பாலைகளில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் என கோவை மண்டலத்தில் 500க்கும் மேற்பட்ட சிறு, குறு நூற்பாலைகள் உள்ளன. இதில் மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், பெரியநாயக்கன்பாளையம், சோமனுார் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 200க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த நுாற்பாலைகளில் பெருவாரியாக கிராமப்புற பெண் தொழிலாளர்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், தென் மாவட்ட தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

மின்கட்டண உயர்வு, பருத்தி கொள் முதல் விலைக்கு ஏற்றார் போல் நுால் உற்பத்தி விலை கிடைக்காதது, வெளிநாடுகளில் இருந்து துணிகள் கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நுாற்பாலைகள் தொடர்ந்து இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் வரிவிதிப்பு அறிவிப்பு மேலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், கிராமப்புற தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கத்தின் செயலாளர் ஜெகதீஸ் சந்திரன் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் பல நுாற்பாலைகள் தங்களது இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். அமெரிக்காவின் 50 சதவீதம் வரி உயர்வு அமலுக்கு வந்தால் நிச்சயம் நுாற்பாலைகள் மூடுவிழா நோக்கி செல்லும் நிலை ஏற்படும்.

காட்டன், பாலிஸ்டர், விஸ்கோஸ் போன்றவற்றை இறக்குமதி செய்கின்றோம். இதற்கான இறக்குமதி வரியை நாம் குறைத்தால் நிச்சயம் இந்த இக்காட்டான சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியும்.

அமெரிக்காவின் வரி விதிப்பு அமலுக்கு வந்து, இறக்குமதி வரியும் குறைக்கப்படவில்லை என்றால் ஜவுளி துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.