தும்பிக்கை இல்லை; நம்பிக்கை இருக்கு! அதிரப்பள்ளி வனத்தில் குட்டி யானை உலா

வால்பாறை; வால்பாறை அருகே, அதிரப்பள்ளி வனத்தில், யானைகள் கூட்டத்தில் தும்பிக்கை இன்றி குட்டி யானை உலா வருகிறது.கோவை மாவட்டம், வால்பாறை அருகே, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதி உள்ளது. அதிரப்பள்ளி வனத்தில், கடந்த ஆண்டு தும்பிக்கை இல்லாத குட்டி யானை ஒன்று யானைகள் கூட்டத்தில் இருப்பதை கேரள வனத்துறையினர் கண்டறிந்தனர். அதன்பின், குட்டி யானையின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை வால்பாறை – அதிரப்பள்ளி ரோட்டில், தும்பூர் என்ற இடத்தில் தும்பிக்கை இல்லாத குட்டி யானை, யானை கூட்டத்துடன் ரோட்டை கடந்து செல்வதை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.வனத்துறையினர் கூறியதாவது:

அதிரப்பள்ளி ரோட்டில் கடந்த ஆண்டு தும்பிக்கை இல்லாத ஆண் குட்டி யானை கண்டறியப்பட்டது. யானைகள் கூட்டத்தில் பாதுகாப்பாக இருக்கும் குட்டி யானைக்கு உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை, தாய் யானை வழங்கி வருகிறது. சில நேரங்களில் அதுவாகவே உணவை உட்கொண்டும் வருகிறது.

யானைகள் கூட்டத்தின் மத்தியில், குட்டி யானையை மிகவும் பாசத்துடன் யானைகள் பராமரித்து வருவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மேலும், தும்பிக்கை இல்லாத குட்டி யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதையும் நேரில் கண்டறிந்தோம்.

இவ்வாறு, கூறினர்.