சவால்களை எதிர்கொள்ளும் பம்ப் தொழில்; சமாளிக்க தயாராகிறது கோவை நிறுவனங்கள்

கோவை; தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) ஆண்டு பொது குழு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. இதன் தலைவராக மிதுன் ராமதாஸ், துணை தலைவர்களாக அருண், செந்தில்குமார், மோகன் செந்தில்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.தொடர்ந்து நடந்த கூட்டத்தில், ‘சீமா’ தலைவர் மிதுன் ராமதாஸ் பேசியதாவது:

சர்வதேச அளவில் நிலையில்லாத பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் இடையே தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் வேறுபாடுகள் உள்ளன. முக்கியமான மூலப்பொருட்கள் இறக்குமதி எப்போதும் நிறுத்தப்படும் என்பது தெரியவில்லை.

மூலப்பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறி இறங்குகின்றன. இவற்றையும் கணிக்க முடிவதில்லை. இத்தகைய நிலையற்ற ஏற்ற இறக்கங்களால், அடிமட்டத்தில் உள்ள தொழில்கள் அழுத்தத்தால் அன்றாட வாழக்கையே பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இத்தகைய நிலையை மாற்ற முயல்கிறது சீமா.
பொருட்கள் உற்பத்தியில் ஏற்படும் செலவினங்களை கட்டுப்படுத்த தேவையான தரக்கட்டுப்பாடு, சிக்கன நடைமுறை திட்டங்களையும், திறன் மேம்பாட்டு முறைகளையும் குறைந்த விலையில் பெற வேண்டியது அவசியம்.

தமிழக அரசு அறிவித்த மோட்டார் பம்ப் பொது வசதி மையம் உதவியாக அமையும். சீனாவில் இருந்து மின்காந்தங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் எழுந்தபோது, மாற்றாக மோட்டார் தயாரிக்கும் திட்டத்தை மேம்படுத்த ஆய்வு மேற்கொண்டுள்ளோம். புதிய வகை மோட்டார்களை உற்பத்தி செய்வதிலும் முயற்சிகள், திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவற்றை மேற்கொள்வதால், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.

கழிவுநீர் அகற்ற தற்போது அதிக அளவில் சீனாவில் இருந்து குறைந்த விலையில் மோட்டார் பம்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதை எதிர்கொள்ள, கோவையில் மோட்டார் பம்ப்புகளை தயாரிக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் சிடார்க், சிறப்பு பொது வசதி மையம், கோயிண்டியா, சீமா இணைந்து இவற்றை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறோம். பிற மாநிலங்கள், சீனா போல் உருவாக நினைத்தால், ஜெர்மனியை போல் கோவை மாற வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ‘சீமா’ முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன், மகேந்திரன் ராமதாஸ், ஜெயக்குமார், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.