சர்வதேச தகவல்களுடன் இணைந்திருங்கள்! மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், 2025–26ம் கல்வியாண்டின் முதலாமாண்டு துவக்க விழா நடந்தது. ‘அகரம் 2025’ என்ற தலைப்பில் நடந்த விழாவில், என்.ஐ.ஏ. கல்லுாரி நிறுவனங்கள் செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் செந்தில்குமார் துறை தலைவர்களை அறிமுகப்படுத்தினார்.என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்து பேசுகையில், ”வேகமாக மாறிவரும் உலகில், நிகழ்வுகள் குறித்த சமீபத்திய தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கற்றலை மேம்படுத்தவும், எதிர்கால சவால்களுக்கு தயாராகும் வகையில் சர்வதேச தகவல்களுடன் மாணவர்கள் இணைந்திருக்க வேண்டும்,” என்றார்.தொடர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கும் 150 மாணவர்களுக்கு, வித்யா சக்தி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கல்லுாரி தாளாளர் ஹரிஹரசுதன், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் பாரம்பரியம் கல்விச் சிறப்பு, புதுமைக்கான நீண்ட கால பங்களிப்பு குறித்து பேசினார்.

சென்னை மொபிவெயில் டெக்னாலஜிஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஸ்ரீனிவாசன், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பொறியியல் இயக்குநர் விஸ்வநாதன் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர் ‘காபி டேபிள்’ புத்தகம் வெளியிடப்பட்டு, ‘முன்னாள் மாணவர் உதவித் தொகை’ திட்டத்தின் வாயிலாக, 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. அறிவியல் மற்றும் மனிதநேயத் துறைத் தலைவர் சித்ரா நன்றி கூறினார்.