போத்தனுார்; கோவையில் கல்லுாரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் சோதனை நடத்திய போலீசார் கஞ்சா, ஆயுதங்கள், போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.கோவை, செட்டிபாளையம் மற்றும் மதுக்கரையிலுள்ள ராஜ் விஜய் நகர், ஜெகதீஷ் நகர், வினாயகா கார்டன், மாச்சேகவுண்டன்பாளையம். சி.எம்.என்.எஸ். என்கிளேவ். பூங்கா நகர். அம்பாள் நகர், பழனிசாமி நகர், ஹிந்துஸ்தான் இன்ஜி., கல்லூரி பின்புறம், மலுமிச்சம்பட்டி சந்திப்பு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள், வீடுகள், மேன்சன்கள் உள்ளன. நேற்று அதிகாலை, 5:30 மணி முதல் இரு டி.எஸ்.பி.க்கள் தலைமையில், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட, 400 போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், மலுமிச்சம்பட்டி, ஸ்ரீராம் நகர், மனோகரன் வீட்டில் தங்கியிருந்த சூடான் நாட்டை சேர்ந்த முகமது அப்துல்வகாப் முகமது மன்சூர், 22, அறையிலிருந்து, 6.3 கிலோ கஞ்சா, ஆயுதங்கள் பிடிபட்டன. அதுபோல், இந்திரா நகர், வி. எம்.கே. பேக்கரி பின்புறம் சுரேஷ் கடையிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 46 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ஆகாஷ், 20, ராஜேஷ். 19, ரித்திஷ்குமார், 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர்; கடை உரிமையாளர் சுரேஷ் தலைமறைவானார்.தொடர்ந்து நடந்த சோதனையில் கார், கத்திகள், போதை புகைக்க பயன்படுத்தும் பாட்டில்கள், கியூ ஆர் கோடு இயந்திரம், சிரிஞ்கள், போலி நம்பர் பிளேட், நம்பர் பிளேட் இல்லாத 46 டூ வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 60க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்; சோதனை, 10:00 மணியளவில் முடிவுக்கு வந்தது.

எஸ்.பி. கார்த்திகேயன் கூறுகையில், ”ஆபரேஷன் கிளீன் கோவை’ சோதனை நடத்தப்பட்டது. 13 குற்றவாளிகள், சந்தேகத்திற்குரியவர்கள் 55 பேர் சிக்கியுள்ளனர். மாணவர் போர்வையில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை பிடிப்பதற்கான சோதனை தொடரும். சூடான் நாட்டை சேர்ந்தவர் அரியர்ஸ் எழுத தங்கியிருந்தார். வீடு, மேன்சன், அபார்ட்மென்ட்களை மாணவர்களுக்கு வாடகைக்கு விடுவோர், போதை பொருள் உபயோகம் குறித்து தெரிந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்,” என்றார்.
கல்லுாரி முதல்வர், வார்டன்
உறுதி செய்ய வேண்டும்
அரசு, தனியார் கல்லுாரி மாணவர் விடுதி வார்டன்களை அழைத்து, குறித்த கால இடைவெளியில் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து மாணவர் விடுதி அறைகளிலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வார்டன் நேரடியாக சோதனை நடத்தி, கல்லுாரி வளாகத்தில் போதைப் பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த உறுதிமொழி ஆவணத்தில் வார்டன், கல்லுாரி முதல்வர் கையெழுத்திட்டு போலீஸ் கமிஷனர் / எஸ்.பி., அலுவலகத்திலும், அதன் நகலை கல்லுாரி எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை, நடைமுறையாக்க வேண்டும். இதேபோன்று, கல்லுாரி அருகில் செயல்படும் தனியார் மாணவர் விடுதி உரிமையாளர்களையும் போதை தடுப்பு நடவடிக்கையில் போலீசார் பொறுப்பாளியாக்க வேண்டும்.
Leave a Reply