பத்திரத்துடன் தராத குறுந்தகடுக்கு ரூ.100 வசூல்! பதிவுத்துறையில் பழக்க தோஷம்

கோவை: கோவையிலுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் குறுந்தகடு (சி.டி.) கட்டணம் என்று, 100 ரூபாய் வசூலிக்கின்றனர். ஆனால் குறுந்தகடு வழங்குவதில்லை.”தற்போது குறுந்தகடு யாரும் பயன்படுத்துவது இல்லை; பிறகு ஏன் இந்த வசூல்?” என்றுகூட மக்கள் கேட்கவில்லை.” ஏதோ பழக்க தோஷத்தில் வசூல் செய்கிறார்கள் போலும். சி.டி.க்கு பதிலாக பென்டிரைவ் அல்லது இ-மெயில் மூலமாக டிஜிட்டல் காப்பி வழங்கினால் நல்லது” என்று பிரச்னைக்கு ஒரு தீர்வை சொல்கிறார்கள்.

கோவை மாவட்ட பத்திரப்பதிவு துறை வடக்கு தெற்கு என்று பிரிக்கப்பட்டுள்ளது. 10 அலுவலகங்கள் வடக்கிலும், 8 அலுவலகங்கள் தெற்கிலும் செயல்படுகின்றன. இது தவிர மாவட்ட பதிவாளர் மற்றும் தணிக்கை பதிவாளர் அலுவலகங்கள், பதிவுத்துறை துணை தலைவர் அலுவலகங்கள் கோவையில் உள்ளன.

மனை, நிலம், வீடு, தொழிற்சாலை, திருமணம், நிறுவனம், சங்கம் என அனைத்து பதிவுகளையும் சார்பதிவாளர் செய்கிறார். பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அப்படியே குறுத்தகட்டில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும். காலத்துக்கும் அழியாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது.சில ஆண்டுகளாக இதை மக்கள் பெரிய நன்மையாக நினைத்தார்கள். ஆனால், காலப்போக்கில் சி.டி. பயன்பாடு மறந்து, பெரும்பாலான மக்கள் பென்- டிரைவுக்கு மாறிவிட்டனர். எனவே, பத்திரம் கைக்கு கிடைத்ததும், சி.டி. எங்கே என்று கேட்டு வாங்குவது இல்லை.

இதை சாக்கிட்டு, பத்திரப்பதிவு அலுவலகங்களில் குறுந்தகடு வழங்குவதை அறிவிப்பு இல்லாமல் அப்படியே நிறுத்தி விட்டனர். ஆனால் அதற்கான 100 ரூபாய் கட்டணத்தை மட்டும் வசூலிக்க தவறவில்லை. குறுந்தகடு வழங்காத பட்சத்தில் அதற்கு பதிலாக பென் டிரைவ், அல்லது இ-மெயில் வாயிலாக சொத்து பத்திர நகலை வழங்கலாம் என மக்கள் கூறினர்.

பத்திர பதிவு துறை துணைதலைவர் பிரபாகரனிடம் கேட்டபோது, “சி.டி. கட்டாயம் வழங்க வேண்டும். ஏன் வழங்கவில்லை என்று விசாரிக்கப்படும். பென் டிரைவில் காப்பி செய்து வழங்குவது, இ-மெயிலில் அனுப்புவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்” என்றார்.

ஆவண எழுத்தர்களிடம் பேசியபோது, “அளவோடு 100 ரூபாய் வசூலிப்பதை போய் பெரிய குற்றம் போல கேட்கிறீர்கள். எந்த நிர்ணயமும் இல்லாமல் லட்சம் லட்சமாக வசூலிப்பதையே லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட எந்த துறையும் கண்டுகொள்வது இல்லை. போவீர்களா..?” என்று மறுபக்கம் திரும்பி கொண்டனர்.