கோவை; கோவை மாநகர போலீசாரின் ரோந்து வாகனங்களை தெரிந்துகொள்ள, ‘ஸ்மார்ட் போன்’ மற்றும் ‘க்யூஆர்’ கோடு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:
காவல் நிலைய பகுதியில் உள்ள, ஒவ்வொரு இருசக்கர மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனத்துக்கும் இன்டர்நெட் வசதியுடன், தனி எண்ணுடன் ‘ஸ்மார்ட் போன்’ வழங்கப்பட்டுள்ளது. எந்த காவலர் பணியில் இருந்தாலும், ரோந்து வாகனத்தின் தொலைபேசி எண் மாறாமல் நிலையாக, 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருக்கும். இது, தாமதமின்றி சரியான நேரத்தில் பணிகளை மேற்கொள்ள இயலும்.

அவசர சூழ்நிலையில் உதவிக்காக காவல்துறையை எளிதில் தொடர்பு கொள்ள, 100 என்ற எண்ணை பயன்படுத்துவதோடு, அந்தந்த பகுதியில் உள்ள ரோந்து வாகனத்தின் நிரந்தர எண்ணையும் எளிதில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பகுதி வாரியாக உள்ள ஒவ்வொரு ரோந்து வாகனத்துக்கும் தனித்தனி மொபைல் போன் எண் ஒட்டப்பட உள்ளது.மாநகரம் முழுவதும் செயல்படும் ரோந்து வாகனங்களின் தொடர்பு எண்கள் மற்றும் ரோந்து விபரங்களை அறிந்துகொள்ள ‘க்யூஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அறிந்துகொள்ள அனைத்து இடங்களிலும், போஸ்டர் அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்படும். கோவை மாநகர காவல்துறையின் சமூக வலைதளம் வாயிலாகவும் ‘க்யூஆர் கோடு’ தெரிந்து கொள்ளலாம்.
ரோந்து வாகன பகுதியில் வசிக்கும் முக்கிய நபர்கள் மறறும் அவசர தொடர்பு எண்களை, அவ்வாகனத்துக்கு வழங்கியுள்ள ஸ்மார்ட் போனில் பதிவேற்றம் செய்யப்படும். ரோந்து காவலர்கள் இருக்கும் இடம், ரோந்து செல்லும் பகுதியை கண்டறிந்து, உதவி கோரும் பொதுமக்களுக்கு தகவல் பரிமாறப்படும்.
மாநில அளவில், 100க்கு வரும் அவசர அழைப்பை ஏற்று நடவடிக்கை எடுப்பதில், கோவை மாநகரம் முதலிடம் பிடித்துள்ளது. தற்போது, தமிழகத்திலேயே முதல்முறையாக அறிமுகம் செய்துள்ள இத்திட்டம், பொதுமக்கள்-காவலர்களுக்கு உதவியாக இருக்கும்.
Leave a Reply