கோவை: கோவையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் ஹைடெக் லேப்கள் அமைக்கும் பணி இன்னும் முடியாததால், மாணவர்களின் கணினி சார்ந்த கற்றல் பாதிக்கப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள 1,210 அரசுப் பள்ளிகளில், 1,095 பள்ளிகளில் இன்டர்நெட் வசதி வழங்கும் பணி தொடங்கி, 902 பள்ளிகளில் வேலை முடிந்துள்ளது. இன்னும் 193 பள்ளிகளில் நெட் இணைப்பு வழங்கவில்லை. பேரூர், சூலூர், எஸ்.எஸ்.குளம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை உட்பட 13 ஒன்றியங்களில் 139 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு இணைப்பு வழங்கப்படாததால், தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் தடைபட்டுள்ளது.

ஹைடெக் லேப் அமைக்கும் பணி 291 பள்ளிகளில் தொடங்கப்பட்டது. இதுவரை 201 பள்ளிகளில் பணி முடிந்துள்ளது. அதிலும், 155 பள்ளிகளில் தான் மாணவர்கள் பயன்படுத்தும் நிலைக்கு ரெடியாக இருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள். பல பள்ளிகளில் பைபர் கேபிள், யூபிஎஸ் போன்ற அடிப்படை சாதனங்கள் கூட வந்து சேரவில்லை.
நகர் மற்றும் புறநகர்களில் பல பள்ளிகளில், ஹைடெக் லேப் செயல்பட தொடங்காததால், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பாடவாரியான வினாடி வினா மதிப்பீடுகள், கால அட்டவணைப்படி நடக்கவில்லை.ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பயிற்றுநர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
இந்த தாமதங்கள், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மேம்பட்ட கற்றல் அனுபவத்தைத் தடுத்துள்ளன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
லேட்டாக லிஸ்டில் ஏறிய கோவை
கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “ஹைடெக் லேப் அமைக்கும் பட்டியலில் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் கடைசியில் தான் சேர்க்கப்பட்டன. இதனால், அதற்கான கட்டமைப்பை உருவாக்கி தர வேண்டிய கெல்ட்ரான் நிறுவனம், அதன் பிறகுதான் பணிகளை தொடங்க முடிந்தது. கேபிள், வயரிங் போன்ற அடிப்படை பணிகளை விரைவாக முடிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அவற்றை அகற்றி, பணியை வேகப்படுத்த முயற்சி செய்கிறோம்,” என்றனர். இரு மாவட்டங்களையும் சேர்ப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்ற கேள்விக்கு, அவர்கள் பதில் அளிக்கவில்லை.
Leave a Reply