பொள்ளாச்சி ; பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மழைக்கு பின் விவசாய பணிகள் பாதித்துள்ளது. இந்த உரங்களை தேவைக்கேற்ப வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதானமாக உள்ளது. இங்கு தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன.மேலும், காய்கறிகள், சின்ன வெங்காயம், வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

ஆனைமலை பகுதியில் நெல் சாகுபடி, மானாவாரி சாகுபடி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் பயிர்களின் வளர்ச்சி, ஆரோக்கியம், மகசூலுக்கு கைகொடுப்பதால், வேளாண் துறையினர் பரிந்துரைப்படி விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
கூட்டுறவு சங்கங்களில் மானிய விலையிலும், தனியார் உரக்கடைகளிலும் இவ்வகை உரங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், முறையாக உரம் கிடைப்பதில்லை. டி.ஏ.பி., உரம் கேட்டால் வேறு உரம் வாங்க கடைக்காரர்கள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து, நேற்றுமுன்தினம் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: ‘யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் முறையாக கிடைப்பதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், போதுமான அளவு இருப்பு இருப்பதாக கூறுகின்றனர்.ஆனால், கூட்டுறவு சங்கங்களை அணுகும் போது, அங்கு விவசாயிகள் கேட்கும் உரம் தேவைக்கு ஏற்ப இல்லை என கூறுகின்றனர்.
உரங்கள் தேவையான நேரத்துக்கு கிடைக்காததால், சாகுபடி செய்த பயிர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, உரங்கள் போதுமான அளவு உள்ளதா; அவை முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அளவு வழங்க வேண்டம் என அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
அதிகாரி ஒருவர் பேசுகையில், ‘யூரியா மட்டும் பயன்படுத்தினால் பலன் தராது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கொண்ட கலப்பு உரங்களும் உள்ளன. இவற்றை விட, யூரியா உர விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் அதை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு, யூரியா பயன்பாட்டை குறைக்க அறிவுறுத்தியுள்ளது. இச்சூழலில், தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.
உரங்கள் 9,635 டன் இருப்பு!
மாவட்ட தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து யூரியா உரங்கள் இறக்குமதி செய்து, அவை சரக்கு ரயில் வாயிலாக கொண்டு வரப்பட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்துக்கும் கணக்கிட்டு உரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில், விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், யூரியா – 1,121 டன், டி.ஏ.பி., – 1813 டன், பொட்டாஷ் – 1,851 டன், காம்பளக்ஸ் உரம் – 3,355 டன், சூப்பர் பாஸ்பேட் – 1,495 டன் என, மொத்தம், 9,635 டன் உரங்கள் இருப்பு உள்ளன. ‘டான்பெட்’ வாயிலாக கூட்டுறவு உரக்கடைகளுக்கு அனுப்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.எந்த இடத்தில் பற்றாக்குறை உள்ளது என விவசாயிகள் தெரிவித்தால் அப்பகுதிக்கு உரங்கள் கூடுதலாக வழங்கப்படும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்கக்கூடாது என, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, கூறினர்.
Leave a Reply