பிரதமர் மீது நம்பிக்கை வையுங்கள்; நல்லது நடக்கும்! நகைக்கடை உரிமையாளர்களுக்கு எம்.எல்.ஏ. வானதி உறுதி

கோவை; தங்க நகைக்கடை உரிமையாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது.அதில், அச்சங்கத்தினர் கூறுகையில், ‘அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 41 பில்லியன் டாலர் மதிப்புக்கு தங்க, வைர நகைகள் ஏற்றுமதியாகின்றன. பாதிப்பு வரத்துவங்கியுள்ளதால், நாணய மதிப்பு வீழ்ச்சியடைகிறது. உள்நாட்டு சந்தையில் தங்க நகை விலை அபரிமிதமாக உயரும்.

ஒரு டாலருக்கு இரண்டு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது. இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீழ்ச்சி சமநிலைக்கு வரும் வரை, தங்க நகை இறக்குமதி வரியை, 6 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக தற்காலிகமாக மாற்றியமைக்க வேண்டும்.

வங்கி கடன்களுக்கு வட்டி நிவாரணம் வழங்க வேண்டும். வேறு நாடுகளில் வர்த்தகம் செய்ய போதிய ஏற்பாடு செய்ய வேண்டும். இழக்கும் வர்த்தகத்தை சமன் செய்ய முன்வர வேண்டும்’ என்றனர்.

ராஜதந்திர நடவடிக்கை கோவை தெற்கு தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி கூறியதாவது:இரு நாட்டுக்கும் இடையே பேச்சுவார்த்தை, ராஜதந்திர நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அமெரிக்க நாட்டில், ஜவுளி, தங்கம் உட்பட வியாபாரத்தை மேற்கொண்டு வருபவர்கள், நம் நாட்டில் இருக்கக் கூடிய தொழிலதிபர்களிடம், நேரடியாக பேசிக் கொண்டிருக்கிற சூழல் உருவாகியுள்ளது. அங்கிருக்கும் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, இதுபோன்ற நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.

சந்தை வாய்ப்பு இப்போதிருக்கும் சூழலை கருத்தில் கொண்டு, பல்வேறு நாடுகளில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது.

பிரதிநிதிகள், குறிப்பிட்ட துறையில் இருப்பவர்களை, நாம் ஏற்றுமதி மேற்கொள்ளாத நாடுகளுக்கு அனுப்பி வைத்து, கண்காட்சி நடத்தி நம் பொருட்களின் தரம் குறித்து அறிய வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜி.எஸ்.டி.,யில் மறு சீரமைப்பு கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தங்க நகை மீதான ஜி.எஸ்.டி.,யில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை குறித்து, தேர்ந்த வல்லுனர்களை கொண்டு ஆலோசித்து தெரிவித்தால், மத்திய அரசிடம் தெரிவிக்க ஏதுவாக இருக்கும். நம் பிரதமர் மீது நம்பிக்கை வையுங்கள்; அனைத்து தரப்பினருக்கும் நிச்சயமாக நல்லது நடக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

கூட்டத்தில், கோவை தங்க நகை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முத்து வெங்கட்ராம், தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளன தலைவர் சபரிநாத், கோவை தங்கக்கட்டி விற்பனையாளர் சங்க செயலாளர் கார்த்திக், தங்க நகை தயாரிப்பாளர் சங்க செயலாளர் சுரேஷ்குமார், தங்க நகை வியாபாரிகள் சங்க செயலாளர் பத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.