கோவை நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளில், சீர் முறையில், உறவினர்களிடம் இருந்து தங்க நகைகள் பெறவும், தங்கத்தை சீராக வழங்கவும், பொதுமக்கள் மத்தியில் தயக்கம் உருவாகியுள்ளது.நமது நாட்டில் அலங்காரத்துக்கு, தங்க அணிகலன்கள் வாங்குவது மட்டுமின்றி, எதிர்கால பொருளாதாரத் தேவைக்காகவும் தங்கத்தின் மீது முதலீடு செய்து, சேமித்து வைத்திருக்கும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது.

திருமணம், காதுகுத்து உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில், நெருங்கிய உறவு முறையில் சீர் செய்யும்போது, தங்க நகை கொடுப்பது வழக்கம்.
குறிப்பாக, தென்மாவட்டங்களில், சீராக தங்க நகை அதிக அளவில் நெருங்கிய உறவினர்கள் வாரி வழங்குவர்.சீர் வரிசை பெறும் குடும்பத்தினர், சீர் கொடுத்த உறவினர் வீட்டு விசேஷம் நடக்கும் சமயத்தில், ஏற்கனவே பெற்றதை விட, சற்று அதிகமாக திருப்பிச் செய்வதும் வாடிக்கை.
இதன்படி, 10 ஆண்டுகளுக்கு முன் காதுகுத்துக்கு தங்க நகையாக சீர் செய்தவர்களுக்கு, தற்போது தங்க நகையாக திருப்பி சீர் செய்ய முடியாமல், பலரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏனெனில், 2015ல் 24 கேரட் 10 கிராம் தங்கம் (சுத்த தங்கத்தின் மதிப்பு மட்டும்), 26,343 ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. தற்போது, 1,01,350 ரூபாயாக விலை உயர்ந்திருக்கிறது.
தங்கத்தின் மீதான விலை, 285 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சுப நிகழ்வுகளுக்கு பரிசாக தங்கநகை பெறவும், வழங்கவும், பொதுமக்கள் யோசனை செய்ய துவங்கியுள்ளனர்.
‘தங்கநகை சீர் திருப்பி செய்ய
நினைத்தால் தலைசுற்றுகிறது’
கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்த ஆனந்த் கூறுகையில், ”2015ல் என் குழந்தைக்கு காதுகுத்து நிகழ்ச்சி நடத்தினேன். தாய் மாமன், அத்தை, தத்தா, பாட்டி என பலரும் சீர் செய்தனர். அப்போது, தங்க நகைகள் எடுத்துக் கொடுத்தனர். தற்போது உறவினர் ஒருவரின் பிள்ளைக்கு திருமணம் வைத்துள்ளார். எனது பிள்ளைக்கு அவர் இரண்டு சவரன் நகை சீர் வழங்கியிருந்தார். இப்போது அதே அளவுக்கு திருப்பிச் செய்ய வேண்டுமென நினைத்தால் தலைசுற்றுகிறது. எங்கள் வழக்கத்தில் தங்கமாக சீர் வாங்கினால், தங்கமாகவே திருப்பிச் செய்ய வேண்டும். இனி எந்த நிகழ்வு வந்தாலும், தங்கத்தில் மொய் பெறுவதை தவிர்க்கப் போகிறேன்,” என்றார்.
Leave a Reply