75,000 சதுரடியாக மாறுகிறது விமான நிலையம்; நான்கு மடங்கு! விரிவாக்கத்துக்குப்பின் கையாளும் திறன் பெருகும்

கோவை; ”நில அளவை பணி முடிந்ததும் விமான நிலைய விரிவாக்கப் பணி விரைவில் துவங்கும். தற்போது 18 ஆயிரம் சதுரடியுடன் உள்ள விமான நிலையம், 75 ஆயிரம் சதுரடியாக மாறும். விமான நிலையத்தின் கையாளும் திறன், நான்கு மடங்கு அதிகரிக்கும்,” என, கோவை விமான நிலைய இயக்குனர் (பொறுப்பு) சம்பத்குமார் தெரிவித்தார்.அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு ஒதுக்கிய, 605 ஏக்கர் நிலத்தில் அளவை பணிகள் ஜனவரி முதல் நடந்து வருகின்றன. தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இப்பணிகள், இம்மாத இறுதியில் நிறைவடையும்.

நிலப்பரப்பில் சிறியளவில் சிக்கல் இருந்தாலும், அவை விரைவில் தீர்க்கப்படும்.

நில அளவை முடிந்ததும், முதல்கட்ட பணியாக, எல்லைப் பகுதிகளை வடிவமைத்து, தடுப்பு சுவர்கள் எழுப்பப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தற்போதுள்ள ஓடுதளம், 2,900 மீட்டர் கொண்டது. விரிவாக்கத்தில் மேலும் 3,800 மீட்டர் இணைக்கப்படும். புதிய ஓடுதளத்துக்காக, 93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் விரிவாக்கத்துக்கு பின், தற்போதுள்ள 18 ஆயிரம் சதுரடியில் இருந்து, 75 ஆயிரம் சதுரடியாகும். இதன் கையாளும் திறன் நான்கு மடங்கு அதிகரிக்கும். முகப்பு பகுதியும் மாற்றம் பெறும்.

கோவை விமான நிலையத்துக்கு தற்போது, 27 விமானங்கள் வந்து செல்கின்றன. நாள்தோறும் சராசரியாக 3,000 பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.விமான நிலையத்தை பார்வையிட அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு


விமான பயணிகளின் சேவை நாள், நேற்று கொண்டாடப்பட்டது. பயணிகளுக்கு கனிவான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மரக்கன்று நடுதல், செல்பி பாயின்ட், ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம் போன்றவை நடக்கும். அரசு பள்ளியை சேர்ந்த, 15 மாணவர்கள் விமான நிலையத்தை பார்வையிட்டு, அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1