மேட்டுப்பாளையம் பகுதியில் ரயில்வே போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு!

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ரயில் வழித்தடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது நடமாடுகிறார்களா எனவும், தண்டவாளங்களில் கற்கள் வைக்கப்படுகிறதா, சேதமடைந்துள்ளதா எனவும் ரயில்வே போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் கோவை -மேட்டுப்பாளையம் இடையே மெமு ரயில், சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி, துாத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஊட்டி மலை ரயிலும் இயக்கப்படுகிறது. நாளுக்கு நாள் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்திற்கு பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காக கோவை சரக ரயில்வே எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி., பாபி, இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் அறிவுறுத்தலின் படி, மேட்டுப்பாளையம் ரயில்வே எஸ்.ஐ. மனோகரன் மற்றும் ரயில்வே போலீசார் பயணிகள் மற்றும் ரயில்நிலையத்தின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக வாட்ஸ் அப் குழுவும் வைத்துள்ளனர். தொடர்ந்து ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. மேலும், இரவு, பகல் என 24 மணி நேரமும் ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையம் வளாகம் என ரோந்து பணி தீவிரமாக மேற்கொள்ளப் படுகிறது.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் கூறுகையில், ”மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் பகுதியில், மர்ம நபர்கள் நடமாட்டம், தண்டவாளங்களில் கற்கள் வைக்கப்பட்டுள்ளதா, மர்ம பொருட்கள் உள்ளதா, தற்கொலைக்கு யாராவது முயல்கின்றனரா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்,” என்றனர்.—-