வால்பாறை; கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி – வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி அருவி அருகே, காலடி தோட்டப்பகுதியில், 15 வயதுள்ள காட்டுயானை காலில் காயத்துடன் சுற்றுவதை கண்டு, வனத்துறையினர் கண்காணித்தனர்.இதனையடுத்து, காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவின் பேரில், எர்ணாகுளம் உதவி கால்நடை மருத்துவர் பினாய் தலைமையிலான வனத்துறையினர், நேற்று காலை யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

யானை மயக்கமடைந்ததும், கண்களுக்கு கருப்புத்துணி கட்டி, காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து தடவிய சிகிச்சை அளித்தனர். யானை மயக்கம் தெளிந்த பின் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.வனத்துறையினர் கூறியதாவது: அதிரப்பள்ளி வனப்பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில், ஒரு யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த யானை நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், கால்நடை மருத்துவர் வாயிலாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, காலில் சீல் பிடித்திருந்த காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Leave a Reply