கோவிலில் வாத்தியங்கள் இசைப்பதற்கு தடை நீக்கம்! அதிகாரி உத்தரவை ரத்து செய்தார் கலெக்டர்

கோவை; கோவிலில் மேளம் உள்ளிட்ட வாத்தியங்களை இசைக்க கூடாது என அறநிலைய துறை அதிகாரி பிறப்பித்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, கலெக்டர் தலையிட்டு, அந்த உத்தரவை ரத்து செய்தார்.துடியலுாரை அடுத்த கே.வடமதுரையில்,விருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.கோவிலில் செயல் அலுவலராக ஷாலினி வேலை செய்கிறார்.

திடீரென ஷாலினி பெயரில் கோவிலில் ஓர் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ‘மேளதாளங்கள், சிவவாத்தியம், உடுக்கை, துடும்பு, தாரை தப்பட்டை, செண்டை மேளம், ஜமாப், சங்கு சேகன்டி ஆகியவற்றை கோவில் வளாகத்தில் இசைக்கக் கூடாது’ எனஅதில் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

காலம் காலமாக கோவிலில் இசைக்கப்பட்டு வந்த வாத்திய கருவிகளை இசைக்க தடை விதித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தடைக்கான காரணத்தையும் ஷாலினியோ மற்ற ஊழியர்களோ தெரிவிக்கவில்லை. இதனால், பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவானது.அறநிலைய துறையின் தடை உத்தரவுக்கு ஆட்சேபம் தெரிவித்து,கோயம்புத்தூர்கலெக்டர் பவன்குமாரிடம், விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஞானசம்பந்தம் மனு கொடுத்தார்.

‘இந்துக்களின் பாரம்பரியம், கலாசாரத்தின் அடிப்படையில் காலம் காலமாக பூஜைகளின் போது மங்கள வாத்தியங்கள் இசைப்பது வழக்கம். அதற்கு அறநிலையத்துறை அதிகாரி தடை விதித்தது இந்துக்களின் உரிமைகளுக்கு எதிரானது. இறைவனுக்கான தாலாட்டு கூட இசையுடனேபாடப்படுகிறது. ஆன்மிகத்தில்இரண்டறகலந்தது இயல், இசை நாடகம். இது இந்துக்களின் பண்பாடு; அதற்கு தடை விதிக்கக்கூடாது’ என, மனுவில் ஞானசம்பந்தம் கூறி இருந்தார்.

அறநிலைய துறையின் தடை உத்தரவுக்கு ஆட்சேபம் தெரிவித்து,கோயம்புத்தூர்கலெக்டர் பவன்குமாரிடம், விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஞானசம்பந்தம் மனு கொடுத்தார்.

மனுவை பரிசீலித்த கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடத்தினார். மனுவில் கூறியுள்ள தகவல்கள் உண்மையே என்பதை கண்டறிந்தார். அவ்வாறு தடை விதிப்பதற்கு அறநிலைய துறையின் சட்ட விதிகளில் இடம் இல்லை என்பதையும் விசாரித்து தெரிந்து கொண்டார்.

அதை தொடர்ந்து, விருந்தீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்ற கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார். அதன்படி, அறிவிப்பு பலகை நேற்று அகற்றப்பட்டது.எனினும், செயல் அலுவலர் ஷாலினி திடீரென எதற்காக இவ்வாறு ஒரு தடை உத்தரவை பிறப்பித்தார் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.