கோவை: மாற்றியமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதம், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது, மத்திய அரசு மக்களுக்கு அளித்துள்ள, தீபாவளி பரிசு என்று குதுாகலிக்கின்றனர்.இந்துஜா, நஞ்சுண்டாபுரம்
ஜி.எஸ்.டி. குறைப்பு, பொதுமக்களுக்கு ஒரு சிறப்பான பரிசு. விரும்பும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க, இது சரியான தருணம். தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளின் பிரீமியங்களுக்கான ஜி.எஸ்.டி. முழுவதுமாக குறைக்கப்பட்டுள்ளது, பாராட்டுக்குரியது.

அனந்த பார்த்திபன், துடியலுார்
ஜி.எஸ்.டி. விகிதத்தை மத்திய அரசு மாற்றியமைத்து, பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை, குறைந்தபட்சம் 18 சதவீதம் வரி இருந்த நிலையில், நிறைய பேர், அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் இருந்தனர். இனி, அந்த நிலை இருக்காது. பொருட்களின் விலை குறையும் போது, நுகர்வு அதிகரிக்கும். நாட்டின் பொருளாதாரம் உயரும்.
சிவா, சுந்தராபுரம்
நான்கு பிரிவுகளாக இருந்த ஜி.எஸ்.டி.விகிதம், இரண்டு பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய ஒன்று. இதை முன்பே செய்திருக்கலாம். இனி, பொருட்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதைப் போல், சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் ஆகியவற்றையும் ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும்.
பிரகாஷ், கணபதி
எங்களின் தயாரிப்பு பொருட்களுக்கான, மூலப்பொருட்கள் வாங்கும் போது, ஜி.எஸ்.டி.18 சதவீதமாக இருந்தது. இதனால், விதவிதமான பொருட்கள் தயாரிக்க முடியவில்லை. உற்பத்தியையும் அதிகரிக்க முடியவில்லை. தற்போது ஜி.எஸ்.டி. விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்கு பேருக்கு வேலை வாய்ப்பையும் தர முடியும்.ஜி.எஸ்.டி. குறைப்பு, பொதுமக்களுக்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதம்தான். இதை இந்தாண்டுக்கான தீபாவளி பரிசு என்றே சொல்ல வேண்டும். மருத்துவ காப்பீடு, மளிகைப் பொருட்கள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர். கடைகள், நிறுவனங்களில் விற்பனை அதிகரிக்கும்.
வாங்கும் திறன் அதிகரிப்பு
பிரதமர் அறிவித்தபடி, வாகனம் வாங்குவோருக்கு நிச்சயமாக இது தீபாவளி பரிசு. இரு வாரங்களாகவே, கார்களுக்கான முன்பதிவு துவங்கி விட்டது. பழைய கார்கள் வாங்க எண்ணியிருந்த பலர், புது கார் வாங்கத் துவங்கி விட்டனர். ‘பேசிக் மாடல்’ வாங்கியவர்கள் அடுத்த மாடலுக்கு செல்கின்றனர். வாங்கும் திறன் அதிகரித்து விட் டது. ஜி.எஸ்.டி. விகிதத்தில் பார்க்கும்போது, கார்களின் தரத்துக்கு ஏற்ப, 50 ஆயிரத்தில் இருந்து 2.50 லட்சம் ரூபாய் வரை, விலை குறைந்துள்ளது. இது மிகப்பெரிய வரப்பிரசாதம். நாங்கள், இன்னொரு தீபாவளியை கொண்டாடுகிறோம்.
– அற்புதராஜ், நிர்வாக இயக்குனர் எஸ்.ஜி.ஏ. குரூப் ஆப் கம்பெனிஸ்
இன்னும் விலை குறையும்
கடந்த மாத இறுதியில், இரு சக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதம் குறைக்கப்பட உள்ளது என தகவல் பரவியது. அப்போதிருந்தே, குறைந்தளவில் முன்பதிவுகள் இருந்தன. 22ம் தேதிக்கு பின், புது வாகனம் வாங்கலாம் என மக்கள் எண்ணியிருக்கலாம். 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ள நிலையில், இன்று (நேற்று) முன்பதிவு இருந்தது. வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப, 7,500 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில், வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
– ஜேம்சன், முதன்மை செயல் அதிகாரி சூர்யபாலா ஹோண்டா
விற்பனை அதிகரிக்கும்
புதிய சீர்திருத்தங்களின்படி, பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைந்துள்ளன. மக்களின் அன்றாட செலவுகளைக் குறைத்து, அவர்களின் வாங்கும் திறனை அதிகரிப்பதே, இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.’டிவி’, ஏ.சி., வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க, சரியான காலகட்டம் இது என்று பொதுமக்கள் ஆர்வமாக வாங்க வருவர்.
– அஸ்கர் அலி, மேலாளர் சென்னை மொபைல்ஸ்
விலைகுறைந்துள்ளது
நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. விகிதம், 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக மாற்றப்பட்ட நிலையில், இந்த புதிய வரி முறை நாடு முழுவதும், அமலுக்கு வந்துள்ளது. பேக்கரி பொருட்களின் விலை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், விலையும் கணிசமாக குறைந்துள்ளது. பால் சார்ந்த உணவுப் பொருட்கள், தினமும் பயன்படுத்தப்படுகின்றன. பால் பொருட்களை நுகர்வோர் அதிகளவு பயன்படுத்தி வரும் நிலையில், இதன் விற்பனை இன்னமும் அதிகரிக்கும்.
– பொன்னுசாமி, நிர்வாக இயக்குனர் அரோமா குழுமம்
Leave a Reply