மேட்டுப்பாளையம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளை பாதுகாக்க, கோவை மாவட்டத்தில் 14 அவசர குழுக்களை கால்நடை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்துார். அன்னுார், காரமடை, மதுக்கரை, செட்டிப்பாளையம், சூலுார், மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 88 கறவை மாடுகள், 2 லட்சத்து 98 ஆயிரத்து 500 ஆடுகள், பல லட்சம் கோழிகள் விவசாயிகளால் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக கால்நடைகள் உள்ளன.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளை பாதுகாக்க, கோவை மாவட்டத்தில் 14 அவசர குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர் தலைமையில் இந்த குழுக்கள் மழையின் போது கால்நடைகள் பாதிக்கப்படும் இடங்களுக்கு நேரடியாக சென்று தேவைப்படும் சிகிச்சைகள், உதவிகளை செய்வார்கள். கால்நடைகளின் பாதுகாப்பிற்காக கால்நடை ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆபத்து நேரத்தில் 1962 என்ற இலவச எண்ணிற்கு அழைத்தால் உடனடியாக கால்நடை ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும். இந்த நடமாடும் ஆம்புலன்ஸில் 1 கால்நடை மருத்துவர், 1 கால்நடை உதவியாளர், 1 ஓட்டுநர் உள்ளிட்டோர் இருப்பார்கள். மாவட்டம் முழுவதும் 12 வட்டாரங்களில் 6 ஆம்புலன்ஸ்கள் தங்களது சேவையை வழங்கி வருகிறது. —கோவை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் மகாலிங்கம் கூறியிருப்பதாவது:-வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை தொடர்ந்து தெரிந்து கொண்டு, சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து கால்நடை கொட்டகைகளும் உறுதியானதாக உள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டும். கொட்டகைகளை சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருக்கவும். குடிநீர் தொட்டிகளை சுத்தமாக பராமரித்து, எல்லா நேரங்களிலும் சுத்தமான மற்றும் புதிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தீவனம் போதுமான அளவு கிடைப்பதை உறுதிசெய்யவும். கால்நடைகளுக்கு சமச்சீர் ஊட்டச்சத்தை வழங்க வேண்டும். சினை கால்நடைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்தை வழங்க வேண்டும்.
மன அழுத்தம் மற்றும் நோய் பரவலைத் தடுக்க, கொட்டகைகளில் கால்நடைகளை கூட்டமாக அடைப்பதைத் தவிர்க்கவும். தீவனத்தைத் தேடி கால்நடைகள் நீண்ட துாரம் நடப்பதைத் தவிர்க்கவும். கனமழை அல்லது வெள்ளத்தின் போது கால்ந டைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். காலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. ஈரமான இடங்களில் மேய்ச்சலுக்கு சென்றால் செடியுடன் சேர்ந்து வேர் பகுதியில் உள்ள மண்களையும் சாப்பிடும் நிலை வரும். இதனால் டயோரியா வர வாய்ப்புள்ளது. காய்ந்த நிலங்களில் மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். விபத்துக்கள் அல்லது மின்சாரம் தாக்குதலைத் தவிர்க்க கால்நடைகளை மின் கம்பங்களில் அல்லது மின் சாதனங்களுக்கு அருகில் கட்டி வைக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.









Leave a Reply