வால்பாறைக்கு டூர் போறீங்களா? நவ. 1 முதல் இ-பாஸ் கட்டாயம்

வால்பாறை: தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணியர் அதிகம் செல்கின்றனர். இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இ – பாஸ் நடைமுறைப்படுத்பட்டது. இதனால், கோவை மாவட்டம் வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வரத்துவங்கினர்.இந்நிலையில், சுற்றுலா பயணியர் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையிலும், வால்பாறை, டாப்சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியவை சுற்றுச்சூழல் ரீதியான பகுதிகள் என்பதால், சென்னை உயர்நீதி மன்றம் வால்பாறைக்கு செல்ல இ -பாஸ் நடைமுறையை செயல்படுத்த உத்தரவிட்டது.

அதன்படி, வால்பாறைக்கு நவம்பர் 1ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வால்பாறைக்கு சுற்றுலா வருவோர், தமிழ்நாடு அரசின் அதிகார பூர்வமான https://WWW.tnepass.in.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். சுற்றுலா வாகனங்கள் தனித்தனியாக இ-பாஸ் பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சுற்றுலா பயணியர் வருகையால் வால்பாறையின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு படி, நவ., 1ம் தேதி முதல் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் இ-பாஸ் பெற வேண்டும்.
இ-பாஸ் இல்லாத சுற்றுலா வாகனங்கள் ஆழியாறு மற்றும் தமிழக கேரள எல்லையில் உள்ள வனத்துறை சோதனை சாவடிகளில் நிறுத்தி வைக்கப்படும். வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்படுகிறது. அரசு பஸ்களில் வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை.

இவ்வாறு, கூறினர்.