கோவை: உலக சிக்கன நாளை முன்னிட்டு, பெற்றோர் வழங்கிய தொகையை வைத்து, பள்ளி மாணவி சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளார்.சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அக். 30ம் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. சிக்கனமாக செலவு செய்து, தபால் நிலையத்தில் சேமிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கோவையில் உள்ள தபால் நிலையங்களில், சேமிப்பு மற்றும் தொடர் சேமிப்பு கணக்கு துவக்கி, வருங்காலத்துக்கு உபயோகப்படுத்த வேண்டும் என, கோவை தபால் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கரும் அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்த செய்தி, ‘தினமலர்’ நாளிதழில் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், செல்வபுரத்தில் வசிக்கும் பிரபுகுமார், ஜெயபிரியா தம்பதியின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் துாரிகா, ‘தினமலர்’ நாளிதழ் செய்தியை கண்டு, நிச்சயமாக இன்று (நேற்று) தபால் நிலையத்தில் சேமிப்பை துவங்க வேண்டும் என்று திட்டமிட்டு, பள்ளி நேரம் முடித்து, தலைமை தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்கினார். இவருக்கு, கணக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாணவி துாரிகா கூறியதாவது:அவ்வப்போது, எனது பெற்றோர் கொடுக்கும் தொகையை சிறுக, சிறுக சேமித்து வருவது வழக்கம். இன்று (நேற்று) தினமலர் நாளிதழில் வந்த செய்தியை கண்டு என் பெற்றோரிடம், தபால் நிலையத்தில் சேமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். பள்ளி நேரம் முடிந்ததும், கூட்ஷெட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில், என் சேமிப்பு தொகையான 16,240 ரூபாயை வைத்து, சேமிப்பு கணக்கு துவக்கினேன். என் பெயரில் கணக்கு புத்தகம் வாங்கிய போது மகிழ்ச்சியடைந்தேன்.இவ்வாறு, அவர் கூறினார். மாணவியின் ஆர்வத்தை பாராட்டிய கோவை தபால் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர், ‘என்னுடைய முதல் சேமிப்பு’ என்ற பெயரில், மாணவியின் பெயர், பள்ளியின் பெயர் பதித்த சான்றிதழ் வழங்கினார்.
 
						


 
							 
						
Leave a Reply