பொள்ளாச்சி; தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில், ‘டிரிப்’ முடித்து நிறுத்தப்படும் பஸ்கள், காலையில் நன்றாக சுத்தம் செய்த பின்னரே வழித்தடத்தில் இயக்க அனுமதிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகம் வாயிலாக, தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. ‘டிரிப்’ முடித்து பணிமனையில் நிறுத்தப்படும் பஸ்களை, சுழற்சி அடிப்படையில் முறையாக சுத்தப்படுத்த வேண்டும்.அதேபோல, பணிமனை அல்லாமல் பிற ஊர்களில் நிறுத்தப்படும் பஸ்கள், பணிமனை திரும்பியவுடன் சுத்தம் செய்ய வேண்டும்.ஆனால், கடந்த காலங்களில், பணியாளர்கள் பற்றாக்குறை, பெயரளவில் சுத்தப்படுத்தும் பணி போன்ற காரணத்தால், அரசு பஸ்களில் படர்ந்துள்ள புழுதி, இருக்கைகளை பார்த்து, பயணியர் அதிருப்தி அடைகின்றனர்.
இந்நிலையில், பணிமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் பஸ்கள், முறையாக சுத்தம் செய்திருப்பதை உறுதி செய்த பின்னரே, வழித்தடத்தில் இயக்க அனுமதிக்க வேண்டும் என, மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பணிமனைகளில், 15 பஸ்களுக்கு ஒரு தற்காலி பணியாளர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்ளுக்கு, நாள் ஒன்றுக்கு, 700 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: பணிமனைகளில், தற்காலிகமாக நியமிக்கப்படும் பணியாளர்கள், பகல் மற்றும் இரவு நேரத்தில், சுழற்சிமுறையில் பணிபுரிவர். ‘டிரிப்’ முடித்து பணிமனையில் நிறுத்தப்படும் பஸ்களை, காலையில் நன்றாக சுத்தம் செய்த பின்னரே, டிரைவர்கள் வழித்தடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதனை அந்தந்த பணிமனையில் உள்ள செக்யூரிட்டி உறுதிபடுத்துகின்றனர். இதன் வாயிலாக, அரசு பஸ்களில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Leave a Reply