இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவரை விடுவிக்க வலியுறுத்தல்..!

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாலை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ‘கனிஷ்கா’ என்ற மீனவ பெண் தன்னுடைய கணவர் கடந்த டிசம்பர் மாதம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறி தங்களது படகை சிறைபிடித்ததோடு படகின் ஓட்டுனராக சென்ற தன்னுடைய கணவரை கைது செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆறு மாத சிறை தண்டனையும், தங்களது சக்திக்கு மீறிய தொகையான 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தங்களுடைய படகு பறிமுதல் செய்யப்பட்டதோடு 40 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கணவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனால், தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு படகுக்கு வாங்கிய கடன் தொகையை கட்ட முடியாமல் தவித்து வருவதாகவும், பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகளுக்கு தேர்வு கட்டணம் கூட கட்ட முடியாமல் தவிப்பதாகவும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னுடைய கணவரை மீட்டு தர வேண்டும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 40 லட்ச ரூபாய் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்து கண்ணீர் விட்டு அழுதார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆவண செய்வதாக கூறினார்..