மயானத்திலும் தீண்டாமை.. கோவையில் அநீதி! மாவட்ட ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்

சென்னை: பொது மயானத்தை பட்டியலின சமூகத்தினர் பயன்படுத்த விடாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட இரும்பு வேலிகளை உடனடியாக அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் பொது மயானத்தை பட்டியலின மக்கள் பயன்படுத்த குறிப்பிட்ட சாதியினர் அனுமதிப்பதில்லை என அக்கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் சூரியகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு மனுவில், செஞ்சேரி கிராமத்தில் இறுதி சடங்குகளை செய்து கொள்ள 4 ஏக்கர் பரப்பில் பொது மயானம் உள்ளதாகவும், ஆனால் அந்த மயானத்தை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.பட்டியலின மக்கள் அந்த மயானத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை, அருகில் உள்ள குளத்தில் இறுதி சடங்குகளை நடத்தி வருவதாகவும், மழைக்காலங்களில் அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கிராம சபை கூட்டத்தில், முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அந்த மயானத்தை பயன்படுத்தும் வகையில் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் அப்பகுதி திட்ட வளர்ச்சி அதிகாரி இரும்பு வேலி அமைத்து கொடுத்துள்ளார்.இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர், சூலூர் தாசில்தார், ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.