பவர்ஹவுஸாக மாறும் கோவை! இனி வேலைத் தேடி சென்னைக்கோ பெங்களூருக்கோ போக வேண்டாம்! டேட்டாவை பாருங்கள்!

கோவை: பெங்களூரை போல் கோவையும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே ஐடி மையமாக கோயம்புத்தூர் மாறும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியில் கோவை மாவட்டம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக சென்னைக்கு அடுத்தபடியாக ஐடி துறையில் வளர்ந்து வரும் மாவட்டமாக திகழ்கிறது. சென்னையில் பிரபல ஐடி நிறுவனங்கள் இயங்கி வருவதை போல் கோயமுத்தூரிலும் அது போன்ற ஐடி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. கோவையில் 2010ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் (special Economic Zone) டைடல் பார்க்கானது விலாங்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உலகின் பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் இயங்குகின்றன. அது போல் எல்காட் சார்பில் 78 ஐடி நிறுவனங்கள் உள்ளன. சென்னைக்கு அடுத்து கோவையை தமிழகத்தின் ஐடி மையமாக (IT HUB) மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2024- 2025 ஆம் நிதியாண்டில் நிதியும் ஒதுக்கீடு செய்தது. அதாவது கோவையில் ரூ 1100 கோடி மதிப்பில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். கோவையில் நிறுவனங்களை அமைக்க குறைந்த செயல்பாட்டு கட்டணங்கள் ஆகின்றன.


அது போல் அங்கு உள்கட்டமைப்பும் வளர்ந்து வருகிறது. திறமையான இளைஞர்கள் ஏராளமானோர் கோவையை சுற்றி இருக்கிறார்கள். எனவே கோவையில் ஐடி மையம் வளர்ந்தால் அவர்கள் கோவையை விட்டுவிட்டு பல கி.மீ. தூரம் உள்ள சென்னைக்கோ, அண்மை மாநிலத்தில் உள்ள பெங்களூருக்கோ செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்கிறார்கள். தமிழகத்தை விட இந்தியாவிலேயே மிகப் பெரிய ஐடி மையமாக மாற கோவைக்கு அனைத்து அம்சங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. கோவையில் ஏன் செலவினங்கள் குறைகின்றன என பார்த்தோமேயானால் அது 2 டயர் சிட்டியில் வருகிறது. அதாவது நகரங்களை அதன் மக்கள்தொகை அடர்த்தியை கொண்டு ரிசர்வ் வங்கி பிரித்துள்ளது.

அந்த வகையில் 50 ஆயிரம் முதல் 99,999 வரை மக்கள்தொகை கொண்ட நகரங்கள் 2 tier city என அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் 2ஆம் கட்ட நகரங்களில் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் 20 நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.அதில் முதலிடத்தில் அகமதாபாத், இரண்டாம் இடத்தில் கொல்கத்தா இருக்கிறது. மூன்றாவது இடத்தில் நம்ம கோவைதான் இருக்கிறது. அது போல் சேலம் 14 ஆவது இடத்திலும் மதுரை 17ஆவது இடத்திலும் திருநெல்வேலி 20ஆவது இடத்திலும் இருக்கிறது.

சூரத், நாசிக், பெலகாவி, ஹூப்லி-தர்வாத், வாராங்கல், திருச்சி ஆகியவை மக்கள்தொகையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் வேகமாக வளர்ந்து வருவதாக பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே கோவை தற்போது 3வது இடத்தில் இருப்பதை பார்த்தால் பெங்களூரை போல் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வருவதையே காட்டுகிறது. எனவே இந்த நகரத்திற்கு மத்திய மாநில அரசுகளின் வலிமையான ஆதரவு இருந்தால் கோவை திறன்மிக்க ஐடி மையமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள். கோவை ஐடி மையமாக விரைவில் மாற வேண்டும் என்றால் அங்கு சாலை, நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மேம்படுத்தினால் இந்த லட்சியத்தை விரைவில் அடைந்துவிடுவோம் என சொல்லப்படுகிறது.