வெள்ளியங்கிரியில் உணவு கூடத்திற்குள் புகுந்த யானை.. வனத்துறை வாகனத்தை முட்டி தள்ளிய வீடியோ வைரல்

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உணவு கூடத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த தண்ணீர் கேனை தூக்கி செல்லும் காட்சிகளும், வனத்துறையினர் வாகனத்தில் விரட்டியபோது வாகனத்தை யானை முட்டி தள்ளிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தென்காசி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் வரும் யானைகளால் மனித விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிகாலை, இரவு நேரங்களில் ஊருக்குள் வரும் யானைகளால் சில நேரம் மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் இரவு நேரங்களில் தொடர் ரோந்துப் பணியில் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதியில் யானைகள் அவ்வப்போது வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதியில் உணவு கூடத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த தண்ணீர் கேனை தூக்கி செல்லும் காட்சிகளும், வனத்துறையினர் வாகனத்தில் விரட்டியபோது வாகனத்தை யானை முட்டி தள்ளிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பூண்டி கிராமம். வெள்ளியங்கிரி பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் அவ்வப்போது உணவு தேடி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் வளாகத்தில் முகாமிடுகின்றன. இங்கு பூஜை சாமான் கடைகள், அன்னதான கூடம் போன்றவை உள்ளதால் உணவு தேடி வரும் யானைகள் இவற்றுக்குள் புகுந்து கிடைக்கும் உணவை சாப்பிட்டு செல்வது தொடர்கதையாகி உள்ளது.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், வெள்ளியங்கிரி அடிவார உணவு கூடத்திற்குள் நேற்று புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த தண்ணீர் கேனை எடுத்துச் சென்றுள்ளது. பின்னர், சிறிது நேரம் உணவுக்கூடம் அருகேயே அந்த யானை முகாமிட்டு உணவு தேடிக் கொண்டிருந்ததால் மலையேற்றத்திற்கு வந்த பக்தர்கள் அச்சமடைந்தனர்.இதையடுத்து, உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினர் வாகனத்தில் ஒலி எழுப்பி ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். வாகனத்தின் சப்தம் கேட்டு சில மீட்டர் தூரம் வேகமாக ஓடிய யானை ஒரு கட்டத்தில் திரும்பி நின்று வனத் துறை வாகனத்தையும் முட்டித் தள்ளியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.